குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 15 Jan 2017 10:59 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

சின்னசேலம்,

நிலத்தடி நீர் மட்டம் குறைவு

சின்னசேலம் அருகே உள்ள கடத்தூர் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இதில் எம்.ஜி.ஆர். நகர், அம்பேத்கர் தெருவை சேர்ந்த 200 குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள பழைய குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பருவமழை பொய்த்தாலும், நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததாலும் அப்பகுதி மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் விளக்காயி அம்மன் கோவில் அருகில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. இந்தநிலையில், இங்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும் என்று கூறி நெடுஞ்சாலைத்துறையினர், குழாய் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த 100–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடத்தூர் பஸ் நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சின்னசேலம்–கச்சிராயப்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி, சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 தினங்களுக்குள் சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

100 பேர் மீது வழக்கு

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் அருணாசலம் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, சாலை மறியலில் ஈடுபட்ட 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story