பெரியகுளம் அருகே விபத்து: ஆட்டோ மோதி மாணவன் பலி
பெரியகுளம் அருகே ஆட்டோ மோதி மாணவன் பரிதாபமாக இறந்தான்.
பெரியகுளம்,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி. அவருடைய மனைவி சசிகலா. அவர்களுடைய மகன் கவுதம் (வயது 7). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் பெரியகுளம் அருகே ஏ.புதுக்கோட்டையில் உள்ள சசிகலாவின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.
இதையடுத்து துக்கம் விசாரிப்பதற்காக மாடசாமி தனது மனைவி, மகனுடன் சென்றார். பெரியகுளம்–கும்பக்கரை சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்று எதிர்பாராத விதமாக கவுதம் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
ஆட்டோ டிரைவர் கைதுஇதுகுறித்து தகவல் அறிந்ததும் பெரியகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பலியான கவுதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவரான காஜா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்றோரின் கண் முன்னே விபத்தில் மாணவன் பலியான சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.