2 மாதங்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை நீலகிரியில் 90 சதவீத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன


2 மாதங்களாகியும் பணத்தட்டுப்பாடு தீரவில்லை நீலகிரியில் 90 சதவீத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 15 Jan 2017 11:19 PM IST)
t-max-icont-min-icon

2 மாதங்களாகியும் பணத்தட்டுப்பாடு தீராததால் நீலகிரியில் 90 சதவீத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன.

கூடலூர்,.

90 சதவீத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டன

கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார், இதனால் பொதுமக்கள் தங்களிடமிருந்த பழைய ரூபாய் நோட்டுகளை கடந்த டிசம்பர் மாதம் 30–ந் தேதி வரை வங்கியில் செலுத்தி மாற்றிக் கொண்டனர். டிசம்பர் 30–ந் தேதிக்கு பிறகு அதிக அளவில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான கெடு முடிந்து பல நாட்கள் ஆன பின்னரும் நிலைமை முன்பை விட மோசமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் 70–க்கும் மேற்பட்ட வங்கி ஏ.டி.எம்.கள் உள்ளன. 2 மாதங்களாகியும் பணத்தட்டுப்பாடு தீராததால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 90 சதவீத ஏ.டி.எம்.கள் செயல்படாமல் மூடியே கிடக்கின்றன.

வியாபாரிகள் தவிப்பு

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:–

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கான காலக்கெடு முடிந்த பின்னரும் ஏ.டி.எம்.களில் பணம் கிடைப்பதில்லை. டிசம்பர் 30–ந் தேதிக்கு முன்பு செயல்பட்ட ஏ.டி.எம்.கள் கூட இப்போது செயல்படவில்லை. இதற்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள 90 சதவீத ஏ.டி.எம்.கள் மூடப்பட்டதால் ஆயிரம் ரூபாய் வேண்டுமென்றாலும் வங்கியில் போய் தான் காத்து கிடக்க வேண்டி உள்ளது. இதற்காக ஒருநாள் வீணாகிறது. மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறும் மத்திய அரசு வங்கியில் சென்று மக்கள் எடுக்கும் பணத்தை ஏ.டி.எம்.களில் வைத்தால் வங்கியில் சென்று காத்திருக்கும் நேரமாவது மிச்சமாகும்.

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையை பெருமளவில் கொண்டு வருகிறார்கள். அவர்கள் கடைகளுக்கு சென்று பொருள் வாங்கினால் அவர்களுக்கு சில்லறை கொடுக்க முடியாமல் வியாபாரிகள் தவித்து வருகிறார்கள். இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தேயிலை தொழிலாளர்கள் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டை பெற வங்கியில் நீண்டவரிசையில் காத்து நிற்கிறார்கள். இதன்காரணமாக அவர்கள் ஒரு நாள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளனர். ஆனால் இங்குள்ள ஏ.டி.எம்.கள் மூடியே கிடப்பதால் செலவுக்கு பணம் எடுக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் தவித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story