மோட்டார் சைக்கிள்- கார் மோதல் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள்- கார் மோதல் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்- கார் மோதிய விபத்தில் அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் பலியானார்கள்.

மீஞ்சூர்,

2 பேர் பலி

செங்குன்றம் அருகே உள்ள விளாங்காடுபாக்கத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 60). அ.தி.மு.க. நிர்வாகி. இவரது நண்பர் தங்கராஜ். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் அருமந்தையில் இருந்து பாடியநல்லூர் நோக்கி சென்றனர். மோட்டார் சைக்கிளை கோபால் ஓட்டிச் சென்றார். அப்போது செங்குன்றத்தில் இருந்து மீஞ்சூர் நோக்கி வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவ்வாறு செல்லும் வழியில் கோபால் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்ட தங்கராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மற்றொரு விபத்து

திருவள்ளூரை அடுத்த காரணி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் இளங்கோவன் (22). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வேலை விஷயமாக கடம்பத்தூர் சென்ற அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வெண்மணம்புதூர் அருகே வரும்போது எதிரே ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் இவரது மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேராக மோதின. இதில் இளங்கோவன், ராமகிருஷ்ணன் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். ராமகிருஷ்ணன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story