கரிக்கலாம்பாக்கத்தில் திடீர் தீ விபத்து


கரிக்கலாம்பாக்கத்தில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 6 வீடுகள் எரிந்து சாம்பல் ஆயின.

வில்லியனூர்,

திடீர் தீ விபத்து

புதுச்சேரி மாநிலம் ஏம்பலம் தொகுதி கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகரைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 42). நேற்று முன்தினம் பொங்கல் தினத்தன்று இரவு இவருடைய குடிசை வீட்டில் திடீரென தீ பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் தீ “மள மள”வென்று அருகில் உள்ள வெள்ளையம்மாள், எட்டியான், அண்ணாமலை, சிவகாமி, எல்லம்மாள் ஆகிய 5 பேரின் வீடுகளுக்கும் பரவியது.

அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் தீ விபத்து பற்றி உடனடியாக வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்ததும் வில்லியனூர் மற்றும் மடுகரை தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

6 வீடுகள் சாம்பல்

இந்த தீ விபத்தில் சாந்தி, எட்டியான், அண்ணாமலை உள்பட 6 பேரின் வீட்டின் கூரைகள், வீடுகளில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆயின. சேதமான பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி, அரசின் வருவாய் துறை சார்பில் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் கார்த்திகேயன், மாவட்ட துணை கலெக்டர் உதயகுமார், ஆதி திராவிடர் நலத்துறை இணை இயக்குனர் ராஜேஸ்வரி, தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் மற்றும் கட்சி பிரமுகர்கள் பிரகாஷ், சவுத்ரி, சங்கர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story