தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டால் பரபரப்பு


தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. அப்போது சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் மடக்கிப் பிடித்தனர்.

மணப்பாறை,

தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டு

விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஜல்லிக்கட்டு சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தடையை மீறி தமிழகத்தின் ஒருசில இடங்களில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. அதேபோல திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வேங்கை குறிச்சியிலும் நேற்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக அங்குள்ள பாம்பாலம்மன் கோவிலில் வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. இதில் 18-க்கும் மேற்பட்ட காளைகள் வேங்கைகுறிச்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.ஜல்லிக்கட்டு நடைபெறும் தகவல் அறிந்ததும் சுற்றுப்புறங்களை சேர்ந்த ஏராளமானோர் வேங்கைகுறிச்சியில் திரண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகள்

பின்னர் அங்குள்ள வாடிவாசலில் காளைகள் ஒன்றொன்றாக அடுத்தடுத்து அவிழ்த்து விடப்பட்டன. அப்போது சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டுக் அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் திமிறிக் கொண்டு ஓடின.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மணப்பாறை பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story