நாய்கள் துரத்தி சென்ற புள்ளிமான் மீட்பு


நாய்கள் துரத்தி சென்ற புள்ளிமான் மீட்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 2:56 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

மண்ணச்சநல்லூர் அருகே நாய்கள் துரத்தி சென்ற புள்ளிமான் மீட்பு

மண்ணச்சநல்லூர்,

மண்ணச்சநல்லூரை அடுத்த திருப்பைஞ்சீலி அருகேஉள்ள பார்வதிபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை இவரது தோட்டத்தின் அருகே நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது புள்ளிமான் ஒன்றை நாய்கள் துரத்திக்கொண்டு வருவதை கண்டார். உடனே அந்த நாய்களை விரட்டி விட்டு புள்ளிமானை மீட்டார். அப்போது மயங்கிய நிலையில் இருந்த அந்த புள்ளிமானை மீட்டு தனது தோட்டத்தில் வைத்திருந்தார். பின்னர் இதுகுறித்து திருச்சி மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் மாவட்ட வன காப்பாளர்கள் ஜான்ஜோசப், விஸ்வநாத் ஆகியோர் விரைந்து வந்து புள்ளிமானை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு கால்நடை மருந்தகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மான், தொடர்ந்து மயங்கிய நிலையில் இருந்ததால் எதுமலையில் உள்ள அரசு வன நாற்றங்கால் பண்ணை பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிமான் ஓமாந்தூரில் உள்ள காட்டிலிருந்து, சோளக்காடுகள் வழியே இரை தேடி வந்திருக்கலாம் என்றும், அப்போது வழி தவறி ஊருக்குள் வந்தபோது நாய்கள் விரட்டியிருக்கலாம் எனவும் வனக்காப்பாளர்கள் கூறினர்.


Next Story