வெறிநாய்கள் கடித்து 5 செம்மறி ஆடுகள் சாவு


வெறிநாய்கள் கடித்து 5 செம்மறி ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

சின்னதாராபுரம் அருகே வெறிநாய்கள் கடித்து 5 செம்மறி ஆடுகள் இறந்தன. நஷ்டஈடு வழங்க விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

க.பரமத்தி,

ஆடுகள் சாவு

திருப்பூர் மாவட்டம் காதகோட்டையை சேர்ந்தவர் செல்லமுத்து(வயது 47). விவசாயி. இவர் கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே உள்ள வெங்கடாபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவர் தனது வீட்டின் அருகே பட்டி அமைத்து அதில் 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அந்த செம்மறி ஆடுகளை தினமும் அவர் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று பின்னர் மாலையில் பட்டியில் அடைப்பது வழக்கம். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைத்திருந்தார். நேற்று காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல சென்றார். அப்போது 5 செம்மறி ஆடுகள் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தன. மேலும் 7 செம்மறி ஆடுகள் படுகாயத்துடனும், 20 செம்மறி ஆடுகள் லேசான காயத்துடனும் நின்று கொண்டு இருந்தன.

விவசாயிகள் அச்சம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து இது குறித்து சின்னதாராபுரம் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் ஆடுகளை வளர்த்து வரும் விவசாயிகள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். இது குறித்து செல்லமுத்து கூறியதாவது:-

செம்மறி ஆடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறேன். இந்த நிலையில் 5 செம்மறி ஆடுகளை வெறி நாய்கள் கடித்து கொன்றுவிட்டன. இதனால் எனக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெங்கடாபுரம் பகுதியில் வெறிநாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இறந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றார்.

Next Story