கறம்பக்குடி, இலுப்பூர் பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போலீசார் விசாரணை


கறம்பக்குடி, இலுப்பூர் பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி,

ஜல்லிக்கட்டு போட்டி

கறம்பக்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியில் தர்மர் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே நேற்று நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினர். இதற்காக அக்கட்சியினர் 30 ஜல்லிக்கட்டு காளைகளை கொண்டு வந்தனர். பின்னர் அந்த காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் ஓடி விட்டன. இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 பேர் மீது வழக்குப்பதிவு

இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசலில் பொங்கல் திருநாள் அன்று பல ஆண்டுகளாக கோவில் மற்றும் ஊர் மாடுகளை அவிழ்த்து விடுவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு வழக்கம்போல் மாடுகளை அவிழ்த்துவிட முயற்சி செய்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாடுகளை அவிழ்த்து விடாமல் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், மாடுகளை அழைத்து வந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இலுப்பூர் போலீசார் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்றதாக ராப்பூசல் பகுதியை சேர்ந்த மாரியப்பன், ரவி, துரையன் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல புதுக்கோட்டை அருகே உள்ள பூங்குடியில் தடையை மீறி நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புதுக்கோட்டை மாவட்ட போலீசார் ஜல்லிக்கட்டு நடத்தியவர்களை தடுத்து நிறுத்தினர்.


Next Story