கலிங்கப்பட்டி கிராம மக்களுடன் பொங்கலை கொண்டாடிய வைகோ


கலிங்கப்பட்டி கிராம மக்களுடன் பொங்கலை கொண்டாடிய வைகோ
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினார்.

திருவேங்கடம்,

கலிங்கப்பட்டியில் வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பொங்கல் விழாவை தனது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் கொண்டாடினார். இதையொட்டி காலையில் தனது இல்லத்தில் உள்ள பெரியார், அண்ணா உருவ படங்களுக்கு வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கலிங்கப்பட்டி கிராமத்தில் அனைத்து தெருக்களுக்கும் நடந்தே சென்றார். அப்போது கிராம மக்கள் அவருக்கு பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ம.தி.மு.க. கொடியை ஏற்றினார்.

பின்னர் கலிங்கப்பட்டியில் வைகோ இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நடந்த நிகழ்ச்சியில், இயக்குனர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தானம், மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு வைகோ பொன்னாடை அணிவித்தார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ராஜேந்திரன், நிஜாம், சண்முகநாதன், பூமிநாதன், ரமேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் வைகோவுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். மாலையில் வேதமுத்துநகரில் கட்சி கொடி ஏற்றினார்.

விளையாட்டு போட்டி

கலிங்கப்பட்டி அம்பேத்கர் திடலில் தலித் தன்னார்வ இளைஞர்கள் நடத்திய பொங்கல் விழாவில் வைகோ கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். கவிதை, கட்டுரை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசுகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் குமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சம்பத் சந்திரா, மாநில தொண்டர் அணி பாஸ்கர சேதுபதி, அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் மோசஸ் சுந்தரம், மாநில தீர்மான குழு செயலாளர் மணிவேந்தன், ஊர் நாட்டாண்மை முத்துவீரப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மாரிச்சாமி நன்றி கூறினார்.

ரத்ததான முகாம்

கலிங்கப்பட்டி ம.தி.மு.க. மாணவர் அணி, மாணவர் மன்றம் சார்பில் பொங்கல் விழாவையொட்டி 2-வது ஆண்டாக ரத்ததான முகாம் நடந்தது. மறுமலர்ச்சி ரத்ததான கழக தலைவரான வைகோ முகாமை தொடங்கி வைத்தார்.

அவர் பேசுகையில், “ரத்ததானம் என்பது பணம் கொடுத்து உதவுவதை விட சிறந்த தானமாகும். நான் 16 முறை ரத்ததானம் செய்துள்ளேன். 60 வயதிற்கு மேல ஆனவர்கள் ரத்ததானம் கொடுக்கக்கூடாது என்பதால் நான் தற்போது ரத்ததானம் செய்வது இல்லை. ரத்ததானம் செய்வது உடலுக்கு நல்லது“ என்றார்.

ம.தி.மு.க. மாணவர் மன்ற நிர்வாகிகள் ருத்திரமூர்த்தி, வருண் கனகராஜ், பாலாஜி, சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கி டாக்டர் சுகந்தகுமாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story