இளம்பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய இந்து முன்னணி பிரமுகர் கைது


இளம்பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய இந்து முன்னணி பிரமுகர் கைது
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அருகே இளம்பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசியதாக இந்து முன்னணி பிரமுகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

செந்துறை,

அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அரசியல் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.

இளம்பெண் பிணமாக மீட்பு

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தில் உள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமான நிலையில் பிணமாக மிதப்பதாக இரும்புலிக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜெயங்கொண்டம் துணைபோலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதிதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட் டனர். பின்னர் செந்துறை தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் அந்த பெண்ணின் உடலை வெளியே எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் 17 வயதான அந்த பெண் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவரை கடந்த மாதம் 29-ந் தேதி முதல் காணவில்லை என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்து முன்னணி பிரமுகர் கைது

இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டனுக்கும், அந்த பெண்ணிற்கும் காதல் இருந்தது தெரிய வந்தது. இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் மணிகண்டன் அந்த பெண்ணை ரகசியமாக அழைத்து சென்று கொலை செய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதி மன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து அரியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இளம்பெண்ணை கொன்று கிணற்றில் வீசிய சம்பவம் அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story