வறட்சியால் விவசாயம் பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்


வறட்சியால் விவசாயம் பாதிப்பு: நிவாரணம் வழங்கக்கோரி தொழிலாளர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பொறையாறு,

விவசாயம் பாதிப்பு

போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் பொறையாறு அருகே உள்ள சங்கரன்பந்தல் கடைவீதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் காபிரியேல் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது, வறட்சியால் வேலையின்றி பட்டினியால் அவதிப்படும் விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாதந்தோறும் 30 கிலோ அரிசி வழங்க வேண்டும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சங்க மாவட்ட செயலாளர் ஸ்டாலின், விவசாய சங்க வட்ட செயலாளர் ராசையன், பொறுப்பாளர்கள் சீனிவாசன், சிம்சன் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் மேற்கண்ட பகுதிக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதைப்போல மயிலாடுதுறை அருகே பெரம்பூரில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் துரைராஜ், சங்க நிர்வாகிகள் ஜான்டேவிட், சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story