ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஊர்வலம்


ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி ஊர்வலம்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

சென்னிமலை, மொடக்குறிச்சி பகுதிகளில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி ஊர்வலம் நடந்தது.

ஈரோடு,

சென்னிமலை


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது. இந்த தடையை நீக்கக்கோரி சென்னிமலையில் நேற்று முன்தினம் காளை மாடுகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் எம்.பி. அ.கணேசமூர்த்தி, ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். விவசாயிகள், ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், காளை மாடுகளுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம் குமரன் சதுக்கம் உள்பட 4 ராஜ வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையம் பகுதியில் முடிவடைந்தது.

அதைத்தொடர்ந்து தற்சார்பு விவசாயிகள் சங்க அமைப்பாளர் கி.வே.பொன்னையன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் எஸ்.பொன்னுசாமி, புரட்சிகர விவசாயிகள் முன்னணியை சேர்ந்த செல்வராசு, பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த என்.ஆர்.வடிவேல் உட்பட பலர் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை கண்டித்தும், இந்த தடையை நீக்க மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை எடுக்க கோரியும் வலியுறுத்தி பேசினார்கள்.

மொடக்குறிச்சி


இதேபோல் மொடக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி நேற்று ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், பொதுமக்கள் ‘‘பீட்டா அமைப்பை தடை செய்யவேண்டும், ஜல்லிக்கட்டை உடனடியாக நடத்திட அனுமதி அளிக்கவேண்டும்’’ உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்கள் எழுப்பியபடி சென்றனர்.

மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் தொடங்கிய ஊர்வலம் தாலுகா அலுவலகம், அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடம், பேரூராட்சி அலுவலகம், ஈஸ்வரன்கோவில், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வழியாக சென்று கரியகாளியம்மன் கோவில் திடலில் முடிவடைந்தது.


Next Story