பெங்களூருவில் திருவள்ளுவர் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவித்தார்


பெங்களூருவில் திருவள்ளுவர் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவித்தார்
x

பெங்களூருவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்–மந்திரி சித்தராமையா நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பெங்களூரு,

சித்தராமையா மாலை அணிவித்தார்

திருவள்ளுவர் தினம் மற்றும் தமிழ் மொழி பேசும் கன்னடர்களின் தின விழா பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் நேற்று காலையில் நடைபெற்றது. இந்த விழாவில் முதல்–மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதுபோல, மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ஆஞ்சனேயா, முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான கே.எச்.முனியப்பா, கர்நாடக மாநில காங்கிரஸ் செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரிஸ்வான், ஹாரீஸ் எம்.எல்.ஏ., காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் விஜயதாரணி எம்.எல்.ஏ., பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி, கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் உள்ளிட்ட பலர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

திருவள்ளுவர் தின ஊர்வலம்

பின்னர் திருவள்ளுவர் தின ஊர்வலம் அல்சூர் ஏரிக்கரையில் இருந்து தொடங்கியது. இந்த ஊர்வலம் காமராஜர் ரோடு, கமர்சியல் தெரு, திம்மய்யா ரோடு, செப்பிங்ஸ் ரோடு, நந்தி துர்கா ரோடு வழியாக மீண்டும் திருவள்ளுவர் சிலையை வந்தடைந்தது. ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் திருவள்ளுவர் உருவப்படம் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது நாட்டுப்புற கலையான டொள்ளு, குனிதா, மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்று இருந்தது.

விழாவில், பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன், கர்நாடக தேவர் சங்க செயலாளர் எம்.மணிகண்டன், கர்நாடக தமிழ் குடும்பங்கள் கூட்டமைப்பின் தலைவர் செந்தில்குமார், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் மோகன் மற்றும் தமிழ் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ். பிரகாசம், எம்.சி.ஏ. சேர்மன் ரகுதேவராஜ், பெங்களூரு மாநகர மாவட்ட காங்கிரஸ் தொழிலாளர் பிரிவு தலைவர் பையப்பனஹள்ளி டி.ரமேஷ், ஜி.ராஜேந்திரன், விஸ்வாத், மகேஸ்வரி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

சித்தராமையா பேட்டி

பின்னர் முதல்–மந்திரி சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:–

திருவள்ளுவர் பிறந்த நாள் விழா ஆண்டு தோறும் பெங்களூருவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் நான் கலந்து கொண்டு திருவள்ளுவருக்கு கவுரவம் செலுத்தி வருகிறேன். அதுபோல, இன்று (அதாவது நேற்று) திருவள்ளுவர் தினம் என்பதால் கன்னடர்கள் மற்றும் கர்நாடக மக்கள் சார்பில் திருவள்ளுவருக்கு கவுரவம் செலுத்தி உள்ளேன்.

கர்நாடகத்தில் சர்வக்ஞர் வாழ்க்கை நெறிமுறைகளை போதித்தது போல, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் திருக்குறளை எழுதி வாழ்க்கை நெறி முறைகளை போதித்துள்ளார். தார்மீக நெறி, அறநெறி போன்ற கருத்துகளை சர்வக்ஞர் எழுதியது போல தமிழில் திருக்குறளை திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். அவரை தமிழ் சர்வக்ஞர் என்றே அழைக்கலாம். பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை அப்போது கர்நாடக முதல்–மந்திரியாக இருந்த எடியூரப்பா, தமிழக முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதி ஆகியோர் திறந்து வைத்தபோது நானும் கலந்துகொண்டேன்.

மனித வாழ்க்கைக்கு தேவையான அறநெறிகளை கற்பிக்கும் திருக்குறளை திருவள்ளுவர் எழுதி இருக்கிறார். அவர் தமிழகத்துக்கு மட்டும் அல்லாது மனிதனாக வாழும் அனைவரும் போற்றி வணங்கும் கவிஞர் ஆவார். மனித குலத்தை பண்படுத்தி, மேம்படுத்திக் கொள்ள திருக்குறள் பயன் உள்ளதாக இருக்கும்.

இவ்வாறு முதல்–மந்திரி சித்தராமையா கூறினார்.


Next Story