அந்தேரி– குர்லா சாலையில் பெஸ்ட் பஸ், கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
அந்தேரி– குர்லா சாலையில் நடுரோட்டில் பெஸ்ட் பஸ், கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை முல்லுண்டு பஸ் டெப்போவில் இருந்து நேற்று பகல் அந்தேரி நோக்கி பெஸ்ட் பஸ் ஒன்று கிளம்பியது. 1.50 மணியளவில் அந்தேரி சக்காலா சர்ச் அருகே சென்று கொண்டு இருந்தபோது, திடீரென பஸ் என்ஜினில் இருந்து கரும் புகை வர ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.
இதைத்தொடர்ந்து பஸ்சில் இருந்த 15 பயணிகள், டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகியோர் அலறி அடித்தபடி உடனடியாக கீழே இறங்கினர். அனைவரும் இறங்கிய சில வினாடிகளில் பஸ் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.
போக்குவரத்து பாதிப்புஇதற்கிடையே பஸ் அருகே நிறுத்தப்பட்டு இருந்த காருக்கும் தீ பரவியது. இதனால் அந்த காரும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பஸ், காரில் எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி அணைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்தேரி– குர்லா சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.