சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது


சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது
x

சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிள் திருட்டு

சென்னை மாநகரில் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடந்து வந்தது. குறிப்பாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் காணாமல் போனது. மோட்டார் சைக்கிள்களை பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அனைத்து மோட்டார் சைக்கிள்களும் புதியவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து, பூக்கடை, யானைகவுனி, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி ஆகிய இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், கடந்த வாரம் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு குறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதாவது, கொளத்தூரில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், அது சந்தேகத்தை கிளப்புவதாகவும் தகவல்கள் கிடைத்தன.

போலீசார் அதிர்ச்சி

அதன் அடிப்படையில், போலீசார் கொளத்தூரில் உள்ள குறிப்பிட்ட மெக்கானிக் கடைக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதாவது, 2 மோட்டார் சைக்கிள்களிலும் ஒரே பதிவு எண் இருந்தது.

அதனால், எம்.கே.பி. நகரை சேர்ந்த கடை உரிமையாளர் சைன்ஷாவிடம் (வயது 28) போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தினர். முதலில் முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், பின்னர் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிட்டார். மோட்டார் சைக்கிள் திருடுவதை தொழிலாகவே கொண்ட சிலர் இதன் பின்னணியில் இருப்பதும் தெரியவந்தது.

போலி பதிவு எண் புத்தகம்

சைன்ஷாவை கைது செய்த போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில், முகமது ஷெரிப் (21), அவரது சகோதரர் முஷரப் (19), புளியந்தோப்பை சேர்ந்த அஜிதுல்லா (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், இந்த திருட்டு தொழிலில் ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டு வந்திருப்பது தெரியவந்தது.

மெக்கானிக் கடை வைத்திருக்கும் சைன்ஷா, தனது கடைக்கு பழுதுபார்க்க வரும் மோட்டார் சைக்கிள்களில் இருந்து, பதிவு எண் புத்தக நகலை எடுத்து வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். எந்த கம்பெனி மோட்டார் சைக்கிள்கள் திருடி கொண்டு வரப்படுகிறதோ, முதலில் அதில் உள்ள பதிவு எண்ணை சைன்ஷா அகற்றி இருக்கிறார். பின்னர், தன்னிடம் உள்ள அதே கம்பெனி மோட்டார் சைக்கிளுக்கான பதிவு எண் புத்தக நகலை வைத்து, போலி பதிவு எண் புத்தகம் தயாரித்து, அதில் உள்ள எண்ணையும் மோட்டார் சைக்கிளில் அச்சிட்டுள்ளார்.

சிறையில் அடைப்பு

அதன் பிறகு, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அந்த மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளார். இதுவரை, கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் புதியவை, சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் குறைவாகவே ஓடியுள்ளன. கைது செய்யப்பட்ட 4 பேரும் நேற்று மதியம் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கூலித்தொழிலாளி தற்கொலை

* கடந்த 4 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் (31) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* திருவொற்றியூர் மண்டலத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 50 கிலோ ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

* கடந்த 12-ந்தேதி சாலை விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தியாகராயநகர் பகுதியை சேர்ந்த ராபர்ட்நிக்சன் (45) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* சென்டிரலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 6.40 மணிக்கு புறப்பட வேண்டிய சென்னை சென்டிரல்-ஹஜ்ரத் நிஜாமுதின் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12269) இணைப்பு ரெயில் தாமதம் காரணமாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6.40 மணிக்கு புறப்படும்.

* எழும்பூர் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரெயில் மோதி பலியானார். 

Next Story