அரக்கோணத்தில் அடகு வியாபாரியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை


அரக்கோணத்தில் அடகு வியாபாரியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 9:49 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் அடகு வியாபாரியை கட்டிப்போட்டு 40 பவுன் நகைகளை கொள்ளை

அரக்கோணம்,

அடகு வியாபாரி

வேலூர் மாவட்டம், அரக்கோணம் மதுரபிள்ளை தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 72). இவர், வீட்டிலேயே நகை அடகு வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி (65). இவர்களுக்கு சங்கர்நாராயணன் (45), ஜெயச்சந்திரன் (43) என 2 மகன்கள் உள்ளனர். சங்கர்நாராயணன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜெயச்சந்திரன் குடும்பத்துடன் திருத்தணியில் வசித்து வருகிறார்.

கிருஷ்ணமூர்த்தியும், கிருஷ்ணவேணியும் அரக்கோணத்தில் தனியாக வசித்து வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கணவன் – மனைவி இருவரும் திருத்தணியில் உள்ள மகன் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு சென்றனர். பின்னர் மாலையில் கிருஷ்ணவேணி சென்னையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.

கிருஷ்ணமூர்த்தி மட்டும் அரக்கோணத்தில் உள்ள வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார். இரவில், அதே பகுதியை சேர்ந்த தெய்வானை (60) என்பவர் கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வந்து கோலம் போட்டுவிட்டு கோலமாவை வீட்டில் வைக்க சென்றபோது வீடு திறந்து கிடந்தது. வீட்டிற்குள் இருந்து முனகல் சத்தம் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தெய்வானை பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் கூறியுள்ளார்.

ரத்த காயங்களுடன்...

அதைத் தொடர்ந்து பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கிருஷ்ணமூர்த்தி கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து கட்டிய நிலையில், முகத்தில் ரத்த காயங்களுடன் கட்டிலுக்கு அடியில் கிடந்தார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் உதவி சூப்பிரண்டு சக்திகணேசன், இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்–இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நேற்று முன்தினம் இரவு 2 வாலிபர்கள் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்குள் நுழைந்து அவரை தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டு, வாயில் துணி வைத்துள்ளனர். பின்னர் அந்த வாலிபர்கள் வீட்டில் இருந்த கொலுசு, தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

40 பவுன் நகை கொள்ளை

இந்த நிலையில் அடகு வியாபாரி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் 400 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டதாக காட்டுத்தீ போல் பரவியது. இதனால் கிருஷ்ணமூர்த்தியிடம் நகையை அடமானம் வைத்தவர்கள் தங்கள் நகை கொள்ளை போய் இருக்குமோ என்று பயந்து அவர் வீட்டு முன்பு குவிந்தனர். இதற்கிடையே கிருஷ்ணமூர்த்தி வீட்டில் லாக்கரில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை போலீசார் சோதனை செய்தனர்.

மேலும் 2013–ம் ஆண்டில் இருந்து அடமானம் வைக்கப்பட்டு இருந்த ரசீதுகளை ஆய்வு செய்தனர். அப்போது 110 பவுன் நகை, 13½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 6 லட்சத்து 16 ஆயிரத்து 50 ரூபாய் கொள்ளையடிக்கப்படாமல் தப்பியது தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுணர் சாந்தகுமாரி அங்கு சென்று கைரேகைகளை சேகரித்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் டி.ஐ.ஜி. தமிழ்ச்சந்திரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பகலவன் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிய வருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.

வலைவீச்சு

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story