போளூரில் அரசு பஸ் டிரைவர், எலக்ட்ரீசியன் வீடுகளில் நகை– பணம் திருட்டு


போளூரில் அரசு பஸ் டிரைவர், எலக்ட்ரீசியன் வீடுகளில் நகை– பணம் திருட்டு
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 9:53 PM IST)
t-max-icont-min-icon

போளூரில் அரசு பஸ் டிரைவர் மற்றும் எலக்ட்ரீசியன் வீடுகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர்.

போளூர்,

டிரைவர்

போளூர் வசந்தம் நகர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம். அரசு பஸ் டிரைவர். இவரது வீட்டின் பின்புற குடியிருப்பில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அமிர்தலட்சுமி அணியாலை உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் பொங்கலையொட்டி பஞ்சாட்சரம் தனது சொந்த ஊரான அநாதிமங்கலம் கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றிந்தார். அதேபோல் ராஜேசும் குடும்பத்துடன் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் பஞ்சாட்சரத்தின் வீட்டின் கதவு திறக்கப்பட்டு கிடப்பதை அருகில் உள்ளவர்கள் பார்த்து பஞ்சாட்சரத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் உடனடியாக புறப்பட்டு போளூர் வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு மற்றும் உள்ளறையின் கதவு திறக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 3½ பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.37 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அவர் போளூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு வீட்டிலும் திருட்டு

இதேபால ராஜேஷ் வீட்டு கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் போளூர் வந்த பின்னர்தான் அவரது வீட்டில் திருட்டுப்போன பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story