சபரிமலையில் மகரஜோதி முடிவடைந்ததால் ராமேசுவரத்தில் அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்
சபரிமலையில் மகரஜோதி முடிவடைந்ததால் ராமேசுவரத்தில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் தொடங்கியதும் அய்யப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதத்தை தொடங்குவது வழக்கம். இவ்வாறு விரதம் மேற்கொள்ளும் பக்தர்களில் ஒருதரப்பினர் சபரிமலைக்கு செல்வதற்கு முன்பாக ராமேசுவரத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்வர்.
மற்றொரு தரப்பினர் சபரிமலைக்கு சென்று விட்டு ஊர் திரும்புவதற்கு முன்பாக ராமேசுவரம் வந்து அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் அங்கு குவிந்தனர். மகரஜோதி முடிவடைந்த நிலையில் ராமேசுவரத்துக்கு நேற்று ஏராளமான அய்யப்ப பக்தர்கள் வந்தனர்.
நீண்ட வரிசையில்...நேற்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்களில் அய்யப்ப பக்தர்கள் ராமேசுவரத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். இவர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடிவிட்டு கோவிலுக்கு உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்காக கீழவாசலில் இருந்து நான்கு ரத வீதிகளை சுற்றிலும் சுமார் 2 கிலோ மீட்டருக்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
மேலும் பக்தர்கள் வருகையால் ராமேசுவரத்தில் சன்னதி தெரு, நான்கு ரதவீதி, நடுத்தெரு, மேலத்தெரு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் எங்கு பார்த்தாலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்கூட்ட நெரிசல் காரணமாக அய்யப்ப பக்தர்கள் வந்த வாகனங்கள் அனைத்தும் போலீஸ் நிலைய பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
பக்தர்கள் வருகை அதிகரித்ததன் காரணமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சண்முகையா தலைமையில் ஏராளமான போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். சுகாதார பணிகளை நகராட்சி ஆணையாளர் ஜெயராம்ராஜா, சுகாதார ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் செய்திருந்தனர். கோவிலில் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.