ஏற்காட்டில் பரபரப்பு துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் காவலாளிக்கு போலீசார் வலைவீச்சு
ஏற்காட்டில் துப்பாக்கியால் சுட்டதில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
ஏற்காடு,
சேலம் மாவட்டம் ஏற்காடு மகிலம்பட்டியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் சண்முகம்(வயது 37), கூலித்தொழிலாளி. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊர் தலைவராக மணி இருந்தார். அப்போது ஊர் பணத்தில் இருந்து சண்முகம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் இதுவரை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு ஊர் பிரமுகர்கள் சிலர் சண்முகத்தை சந்தித்தனர். அப்போது அவரிடம், பொங்கல் பண்டிகைக்காக சாமிக்கு வழிபாடு செய்ய வேண்டி இருப்பதால் உடனே பணம் கொடுக்குமாறு அவர்கள் தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக ஊரில் கூட்டமும் நடத்தப்பட்டது.
குண்டு பாய்ந்ததுஇதில் கலந்து கொண்ட சண்முகம் பொதுமக்கள் முன்னிலையில் இன்னும் 10 நாட்களில் ரூ.10 ஆயிரத்தை செலுத்திவிடுவதாக தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று மாலை சண்முகம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த எஸ்டேட் ஒன்றில் இரவு காவலாளியாக வேலை செய்யும் சிவக்குமார்(31) என்பவர் சண்முகத்தை வழிமறித்து ஊர் பணம் குறித்து கேட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த சிவக்குமார் வீட்டுக்கு வேகமாக சென்று அங்கிருந்த துப்பாக்கியை எடுத்து வந்து சண்முகத்தை நோக்கி சுட்டார். இதில் 2 குண்டுகள் சண்முகத்தின் வலது இடுப்பு பகுதியில் பாய்ந்தது. இதையடுத்து அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்ததும் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
போலீசார் விசாரணைபின்னர் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயம் அடைந்த சண்முகத்தை அந்த பகுதியில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சிவகுமார் தன்னுடைய தந்தை புஷ்பநாதன் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வந்து சண்முகத்தை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.