அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் வந்தவர்கள் மீது போலீஸ் தடியடி


அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஊர்வலம் வந்தவர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 17 Jan 2017 5:00 AM IST (Updated: 17 Jan 2017 12:24 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள் திரண்ட நிலை

மதுரை,

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத நிலையில் இந்த வருடமாவது ஜல்லிக்கட்டு நடக்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த வருடமும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

பொங்கலையொட்டி அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டு போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்து விடக்கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

காளைகளுக்கு மரியாதை

இந்நிலையில் தடையை மீறி, ‘அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த திரண்டு வாருங்கள்‘ என சமூக வலைத்தளங்கள் மூலம் ஏற்கனவே பல்வேறு அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த அழைப்பை ஏற்று சென்னை, கோவை, ஈரோடு, திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் நேற்று அதிகாலை முதலே அலங்காநல்லூரில் ஒன்று திரண்டனர்.

இந்தநிலையில், கிராம மக்கள் சார்பில் கோவில் காளைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த காளைகள் வாடிவாசல் அருகே உள்ள காளியம்மன், முத்தாலம்மன் கோவில்களுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதற்கு மேல் அவர்கள் வாடிவாசல் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

சிறிது நேரத்தில் ஒரு தெருவுக்குள் இருந்து வந்த காளை கூட்டத்தில் சீறிப்பாய்ந்து ஓடியது. அதை அடக்க வீரர்கள் முயன்றனர். இதைத்தொடர்ந்து அலங்காநல்லூர் மேற்குப்பகுதியில் இருந்து ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள், மாடுபிடிவீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் 3 காளைகளுடன் ஊர்வலமாக வந்தனர். பஸ் நிலையம் அருகே வந்த அவர்கள் போலீசார் வைத்திருந்த தடுப்புக் கம்பிகளை ஒதுக்கி விட்டு தடையை மீறி வாடிவாசலுக்கு சென்றனர். அங்கு போலீசார் காளைகளுடன் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஒரு காளையை, அந்த காளை உரிமையாளர் திடீரென அவிழ்த்து விட்டார். இதனை கண்ட மாடுபிடி வீரர்கள் ஆர்வத்துடன் அந்த காளையை அடக்க முயற்சி செய்தனர்.

இதைத் தொடர்ந்து, போலீசார் இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் சேலத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் 20 பேர் காயம் அடைந்து சிதறி ஓடினர்.

வாடிவாசலில் தர்ணா

இதற்கிடையே அலங்காநல்லூர் மெயின்ரோடு, ஆஸ்பத்திரிசாலை உள்ளிட்ட பகுதிகளில் கன்றுக்குட்டிகளுடன் காளை ஒன்றும் அவிழ்த்து விடப்பட்டது. இதைப்பார்த்த மாடு பிடி வீரர்களும், இளைஞர்களும் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். இதனை கண்ட போலீசார் அந்த மாடுகளை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

அப்போது மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வாடிவாசல் அருகிலேயே தர்ணா போராட்டம் நடத்தினர். அவர்கள், பீட்டா அமைப்பை கண்டித்தும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டங்கள் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. தடையை மீறியவர்கள் மீது 3 முறை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். போராட்டங்களில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முக்கிய பிரமுகர்கள்

இதற்கிடையே கிராமமக்கள், மாடுபிடிவீரர்கள், காளை உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கலந்து கொண்ட அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் வாடிவாசல் பகுதியில் தொடங்கி பஸ்நிலையம் வழியாக கேட்டுக்கடை வரை சென்றது. இந்த ஊர்வலத்தில் கிராம மக்கள், இசையமைப்பாளர் ஹிப்பாப் தமிழா ஆதி, டைரக்டர் அமீர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே, அலங்காநல்லூர் பகுதிக்கு வரும் பிரதான சாலைகளில் ஏராளமான சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. கார், ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வந்த இளைஞர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை அருகில் உள்ள தோப்புகளில் விட்டு விட்டு நடந்தே அலங்காநல்லூருக்கு சென்றனர்.

Next Story