ஈரோடு வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கல் கொண்டாட்டம் ஆயிரக்கணக்கான பெண்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்
ஈரோட்டில் காணும் பொங்கலை கொண்டாடும் வகையில் வ.உ.சி. பூங்காவில் குவிந்த ஆயிரக்கணக்கான பெண்கள் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
காணும்பொங்கல் விழாவை நேற்று தமிழ்நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடினார்கள். அதேபோல் ஈரோட்டில் வ.உ.சி.பூங்காவில் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இங்கு ஒரு சிறப்பு என்னவென்றால் காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்கு பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆண்களில் தாயார் அல்லது சகோதரிகளுடன் வந்த 10 வயதுக்கு உள்பட்ட சிறுவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். காணும்பொங்கலையொட்டி பெண்கள் மட்டுமே கூடி உற்சாகமாக கொண்டாடும் இடம் என்றால் அது ஈரோடு வ.உ.சி. பூங்கா என்பது உண்மை.
பெண்கள் குவிந்தனர்தொன்றுதொட்டு நடந்து வரும் இந்த வழக்கம் நேற்றும் கடைபிடிக்கப்பட்டது. விழாவையொட்டி நேற்று காலை முதல் வ.உ.சி. பூங்கா மற்றும் மைதானம் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. நுழைவு வாயில்களில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
காலை 10 மணி முதல் பெண்கள் உற்றார் சுற்றத்தாருடன் வரத்தொடங்கினார்கள். கைகளில் கரும்பு, பலகாரம் உள்ளிட்ட பொருட்களுடன் பூங்காவுக்குள் நுழைந்து தங்களுக்கான இடத்தை பிடித்துக்கொண்டனர்.
பிற்பகல் 3 மணி அளவில் பெண்களின் வருகை அதிகரித்தது. ஆண்கள் தங்கள் வீட்டு பெண்களை பூங்கா நுழைவு வாயில்வரை கொண்டு வந்து விட்டுவிட்டு புறப்பட்டு சென்றனர்.
விளையாட்டுகள்மாலையில் பூங்கா முழுவதும் ஆயிரக்கணக்கான பெண்கள் கூடிவிட்டனர். கைக்குழந்தைகள் முதல் வயதான பாட்டிகள் வரை வயது வித்தியாசமின்றி பூங்கா பெண்களால் நிரம்பியது.
சிலர் தங்கள் பகுதிகளை சேர்ந்த பெண்களுடன் ஒன்று சேர்ந்து ஒரு குழுவாக வந்து காணும் பொங்கலை கொண்டாடினார்கள். உற்றார், உறவினர்களை சந்தித்தும், தோழிகள், தெரிந்தவர்களை பார்த்து நலம் விசாரித்தும் பெண்கள் மகிழ்ந்தார்கள்.
கபடி விளையாட்டு, கண்ணாமூச்சி, நொண்டியடித்தல் என்று பெண்கள் தங்களுக்குள் பல போட்டிகள் நடத்தி விளையாடினார்கள். பாடல் திறமை கொண்டவர்கள் சினிமா பாடல்களை பாடி கலக்க, பாட்டுக்கு ஏற்ப சிலர் நடனம் ஆடி கலக்கினார்கள்.
மகிழ்ச்சிபள்ளி–கல்லூரி மாணவிகளுக்கு நிகராக குடும்ப தலைவிகளும் குத்தாட்டம் போட்டு அசத்தினார்கள். மேள தாளங்கள், மைக் செட்டுகளுடன் வந்து திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பியும், அதற்கேற்ப நடனங்கள் ஆடியும் கொண்டாடினார்கள்.
சிலர் குழுவாக கோலாட்டம் ஆடியும், பாட்டுக்கு பாட்டு போட்டி நடத்தியும், தங்கள் விருப்பம்போல விளையாடினார்கள். சிறு குழந்தைகளுக்கு போட்டியாக இளம் பெண்களும் குடும்ப தலைவிகளும், மூதாட்டிகளும் பந்துகளை தட்டி ஓடிப்பிடித்து விளையாடி மகிழ்ந்தனர்.
ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சந்திரா என்பவர் தவிலுடன் பூங்காவிற்கு வந்தார். அவர் தவில் அடிக்க அங்கு சுற்றி நின்றிருந்த பெண்கள் நடனம் ஆடி ஆரவாரம் செய்தனர். இதுகுறித்து சந்திரா கூறும்போது, ‘‘நான் கடந்த 35 ஆண்டுகளாக வ.உ.சி. பூங்காவிற்கு காணும் பொங்கல் தினத்தில் வருகிறேன். இதில் 10 ஆண்டுகளாக தவில் கொண்டு வருகிறேன். வீட்டில் எப்போதும் வேலைகளுடன் இருக்கும் பெண்களுக்கு ஆண்டில் ஒருமுறை சுதந்திரமாக கொண்டாடுவது மனஅழுத்தத்தை குறைக்கும் வகையில் உள்ளது. இதனால் ஆண்டுதோறும் வந்து மகிழ்ச்சியாக காணும் பொங்கலை கொண்டாடுகிறோம்.’’, என்றார்.
கவலைகள் மறக்கும் இடம்இதுகுறித்து கருங்கல்பாளையத்தை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் கூறும்போது, ‘பொங்கல் பண்டிகை என்றாலே வ.உ.சி. பூங்காவில் கொண்டாடும் காணும்பொங்கல் விழாதான் எனக்கு நினைவுக்கு வரும். 15 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு தவறாமல் வந்து கொண்டிருக்கிறேன். எங்கள் பகுதி பெண்கள் அனைவரும் ஆர்வமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம். எத்தனை பண்டிகைகள் வந்தாலும் காணும்பொங்கல் போன்று இருப்பதில்லை. இங்கே ஆண்கள் யாரும் இல்லை. எனவே எந்த கவலையுமின்றி நாங்கள் விரும்பியபடி பாட்டுப்பாடியும், நடனம் ஆடியும் கொண்டாடுகிறோம்’ என்றார்.
பி.பி.அக்ரகாரம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி என்பவர் கூறும்போது, ‘எங்களுக்குள்ளும் சில ஆசைகள் இருக்கும். சில நேரங்களில் சந்தோஷமாக ஓ... என்று கத்த வேண்டும். மனதுக்கு இதமாக மகிழ்ச்சியுடன் நடனம் ஆட வேண்டும் என்று நினைத்தாலும் குடும்ப பெண்ணாக வீடுகளில் அது சாத்தியமில்லை. ஆனால் வ.உ.சி. பூங்காவில் காணும் பொங்கலையொட்டி ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படாததும், எங்களை போன்ற உணர்வுள்ள பெண்கள் அதிகமாக கூடுவதாலும் கவலைகளை மறக்க சிறந்த இடமாக உள்ளது’ என்றார்.
மகிழ்ச்சிபள்ளிப்பாளையம் வெப்படை பகுதியை சேர்ந்த சரண்யா என்ற இளம்பெண் கூறும்போது, ‘ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெண்கள் மட்டுமே கொண்டாடும் காணும் பொங்கல் விழா குறித்து கேள்விப்பட்டு இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக வரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. இந்த ஆண்டு முதல் முறையாக வந்து இருக்கிறேன். இங்கு வந்த பிறகுதான் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டேன். மகிழ்ச்சியில் தோழிகளுடன் சேர்ந்து விசில் அடித்து கொண்டாடினேன். நீண்ட நாளாக அடக்கி வைத்திருந்த நடனம் ஆடும் ஆசையையும் நிறைவேற்றிக்கொண்டேன். மிக மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்.
ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கூடி மகிழ்ந்தனர். வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையில், சப்–இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
பவானிசாகர்இதேபோல் பவானிசாகர் அணைப்பகுதியையொட்டி உள்ள பூங்காவில் நேற்று பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் வந்து, பூங்காவில் உள்ள நீர் உந்துகளை பார்த்து ரசித்தனர். மேலும் படகில் சவாரி செய்தும், ஊஞ்சலில் ஆடியும் மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் பவானிசாகர் அணை முன்பு உள்ள மீன் கடைகளில் மீன் விற்பனை ஜோராக இருந்தது.
இதேபோல் கொடிவேரி அணைக்கட்டு உள்பட பல இடங்கள் நேற்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.
அந்தியூர்இதேபோல் காணும் பொங்கலையொட்டி அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த உணவை அணைப்பகுதியில் வைத்து சாப்பிட்டனர். மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் அணையின் நீர்த்தேக்க பகுதியில் காட்டு யானைகள் தண்ணீர் குடிக்க வருகிறதா? என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் யானைகள் வராததால் சுற்றுலா பயணிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.