கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தென்னை நார் ஏற்றிச்சென்ற லாரியில் தீப்பற்றியது
கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தென்னை நார் ஏற்றிச்சென்ற லாரியில் தீப்பற்றியது. இதை தீயணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
கம்பம் பகுதியில் தென்னை நார் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தென்னை நார் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் நேற்று மாலை கம்பத்தில் இருந்து கேரளாவுக்கு தென்னை நாரை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை உத்தமபாளையம் அருகே உள்ள காக்கில்சிக்கையன்பட்டியை சேர்ந்த சுதாகர் என்பவர் ஓட்டினார்.
கம்பம்–குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது தேனீர் குடிப்பதற்காக சாலையோரத்தில் லாரியை டிரைவர் நிறுத்தினார். பின்னர் சாலையின் மறுபக்கம் உள்ள கடைக்கு சென்றார். இந்த நிலையில் அந்த லாரியில் இருந்த தென்னை நாரில் திடீரென தீப்பற்றியது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உத்தமபாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே லாரியிலும் தீ பரவியது.
போராடி அணைத்தனர்சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து லாரியில் பற்றிய தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அப்போது காற்று பலமாக வீசியதால் உடனடியாக அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இருந்த போதிலும் சுமார் 2 மணி நேரம் போராடி லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் லாரியில் பாதி எரிந்த நிலையில் இருந்த தென்னை நாரையும் அகற்றினர்.
இதனால் மீண்டும் தீப்பற்றுவது தடுக்கப்பட்டது. தீ விபத்தில் லாரியும், தென்னை நார்களும் முழுமையாக சேதமடைந்ததாகவும், அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் அருகே லாரி நிறுத்தப்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டிருக்கலாம். அது தென்னை நார் மீது தீப்பற்றியிருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.