பனியின் தாக்கம் அதிகரிப்பு: பாகற்காய் கொடிகள் கருகுவதால் விவசாயிகள் கவலை
கூடலூர் பகுதியில் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாகற்காய் கொடிகள் கருகுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலூர் பகுதியில் பருவமழை சரிவர பெய்யாமல் போனதால் வறட்சியான காலநிலை காணப்படுகிறது. ஆறுகள் வறண்டு விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு நிலவு வருகிறது. இதனிடையே பருவமழை பொய்த்து போனதால் ஆண்டுதோறும் நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வரும் பெரும்பாலான விவசாயிகள் நடப்பு ஆண்டில் விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.
மேலும் நெல் பயிருக்கு மாற்றாக குறைந்த அளவு ஈரப்பதத்தில் வளரக்கூடிய பாகற்காய் விவசாயத்தை முன்கூட்டியே பயிரிட்டுள்ளனர். வழக்கமாக நெல் அறுவடை முடிந்த உடன் ஜனவரி மாத தொடக்கத்தில் பாகற்காய் பயிரிடும் பணியை விவசாயிகள் தொடங்குவது வாடிக்கை. இந்த நிலையில் முன்கூட்டியே பயிரிட்டுள்ள பாகற்காய் கொடிகளில் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கருகும் பாகற்காய் கொடிகள்இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இரவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் தேயிலை செடிகள் கருகி வருகின்றன. கூடலூர் பகுதியிலும் பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பாகற்காய் கொடிகள் கருக தொடங்கி உள்ளன. இதனால் கூடலூர், புத்தூர்வயல், தோட்டமூலா, ஸ்ரீமதுரை, முதுமலை ஆகிய இடங்களில் பல ஏக்கர் கணக்கில் பயிரிட்டுள்ள பாகற்காய் கொடிகளின் இலைகள் கருகி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பாகற்காய்களும் விரைவில் பழுத்து விடுகிறது. இதனால் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகி உள்ளதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் கூறும்போது, போதிய மழை இல்லாததால் நீர்பாசன வசதி கிடைக்காமல் போனது. இதனால் நெல் நடவு பணிகள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ள வில்லை. இருப்பினும் பொருளாதார பாதிப்பில் இருந்து மீள முன்கூட்டியே பாகற்காய் விவசாயத்தில் கவனம் செலுத்தினால் பனியின் தாக்கத்தால் பாகற்காய் கொடிகள் கருகி வருகின்றன. இதனால் எந்த பயிரை விவசாயம் செய்தாலும் நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.