கன்னேரிமுக்குவில் அமைக்கப்பட்டு வரும் ஜான் சலீவன் பூங்கா ஜூன் மாதம் திறக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


கன்னேரிமுக்குவில் அமைக்கப்பட்டு வரும் ஜான் சலீவன் பூங்கா ஜூன் மாதம் திறக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

கன்னேரிமுக்குவில் அமைக்கப்பட்டு வரும் ஜான் சலீவன் பூங்கா ஜூன் மாதம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.

நினைவு நாள்

நீலகிரி மாவட்டத்தில் முதல் கலெக்டராக இருந்தவர் ஜான் சலீவன். இவருடைய நினைவகம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் அமைந்துள்ளது. அங்கு நேற்று ஜான் சலீவனின் 162–வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி ஜான் சலீவன் சிலைக்கு மாலை அணிவித்தும், அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:–

நீலகிரி மாவட்டத்தை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஊட்டியை அறிமுகப்படுத்திய பெருமை ஜான்சலீவனையே சேரும். 1823–ம் ஆண்டு ஊட்டி ஏரியை வடிவமைத்த பெருமை, தேயிலையை அறிமுகப்படுத்திய பெருமை போன்றவையும் அவரையே சாரும்.

ஜூன் மாதம் திறக்கப்படும்

அவருடைய நினைவாக கன்னேரிமுக்குவில் ஜான் சலீவன் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. இதையொட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்படும். இந்த நிதியின் மூலம் ஜான் சலீவன் பூங்கா பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு, வருகிற ஜூன் மாதம் பூங்காவை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைவரும் ஜான் சல்லீவனுக்கு மரியாதை செலுத்தினாலும், அரசு மரியாதையே பிரதானமானது. எனவே அரசே ஜான் சலீவன் நினைவகத்தையும், பூங்காவையும் நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் மணிமேகலை, செயல் அலுவலர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம், சுகாதார ஆய்வாளர் கண்ணன், சலீவன் அறக்கட்டளை நிர்வாகி ஆல்வாஸ், கன்னேரிமுக்கு ஊர்த்தலைவர் ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story