மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை பதுக்கி வைத்து மது விற்ற 90 பேர் கைது ராஜபாளையத்தில் 1,654 மது பாட்டில்கள் பறிமுதல்


மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை பதுக்கி வைத்து மது விற்ற 90 பேர் கைது ராஜபாளையத்தில் 1,654 மது பாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பதுக்கி வைத்து மது விற்ற 90 பேரை கைது

ராஜபாளையம்,

அதிரடி சோதனை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் சிலர் விதிகளை மீறி கூடுதல் விலைக்கு மது வகைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் தீவிர வேட்டை நடத்திட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. கூடுதல் சூப்பிரண்டு ரவி தலைமையில், ராஜபாளையம் துணை சூப்பிரண்டு சங்கரேஸ்வரன் அடங்கிய குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம் அருகே முகவூரில் உள்ள சினிமா தியேட்டர் எதிரே உள்ள, டாஸ்மாக் கடையுடன் செயல்படும், நெல்சன் என்பவர் நடத்தி வரும் மது அருந்தும் கூடத்தில் மது விற்பனை நடப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு சோதனை செய்த போது, பதுக்கி வைத்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது தெரிய வந்தது. மது விற்பனை செய்த கடை ஊழியர் முகவூரை சேர்ந்த கணேசனை கைது செய்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 1,654 மது பாட்டில்கள் மற்றும் ரூ48,282 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

சாத்தூர்

சாத்தூர் உப்பத்தூரில் 7 மதுபாட்டில்களுடன் ராஜ்குமார் என்பவரை தாலுகா போலீசார் கைது செய்தனர். வெம்பக்கோட்டை போலீசார் தாயில்பட்டியை சேர்ந்த குருசாமி என்பவரை கைது செய்து 122 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இருக்கன்குடி போலீசார் இருளப்பன் என்பவரை கைது செய்து 6 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். கோவில்மேடு பகுதியில் 6 மதுபாட்டில்களுடன் ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார்.

சாத்தூர் டவுனில் 10 மதுபாட்டில்களுடன் ஜெயராமன் என்பவரும் அண்ணாநகரில் 10 மதுபாட்டில்களுடன் பாண்டி என்பவரும் கைது செய்யப்பட்டனர். சாத்தூரில் உள்ள தனியார் மது அருந்தும் கூடத்தில் 54 மதுபாட்டில்களுடன் பரமசிவம் என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல வெம்பக்கோட்டை மெயின்ரோடு பகுதியில் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகாசி

சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ராமசுப்பிரமணி மற்றும் போலீசார் சித்துராஜபுரம், வெம்பகோட்டை ரோடு, பராசக்தி காலனி, அம்பேத்கர் சிலை, சிவன் கோவில் மற்றும் தனியார் தியேட்டர் அருகே உள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிவகாசி பகுதியை சேர்ந்த ஈஸ்வரன், ராமச்சந்திரன், பொன்ராஜ், பாடலிங்கம், சாத்தூரை சேர்ந்த சேகர், திருத்தங்கல் பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் அற்புதராஜ் ஆகிய 7 பேரும் மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்த 70 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் காசியம்மாள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எம்.துரைசாமிபுரம் மற்றும் காக்கிவாடன்பட்டி பகுதிகளில் அம்மாபட்டியை சேர்ந்த முனியராஜ், முருகன்ஆகிய இருவரும் பதுக்கிவைத்து மது பாட்டில்கள் விற்றுக்கொண்டிருந்தது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

83 வழக்குகள்

மாவட்டம் முழுவதும் மொத்தம் 91 பேர் மீது 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 90 பேர் கைது ஆனார்கள்.

Next Story