வனப்பகுதியில் வறட்சி: நீர்நிலைகளை தேடி அலையும் காட்டுயானைகள்


வனப்பகுதியில் வறட்சி: நீர்நிலைகளை தேடி அலையும் காட்டுயானைகள்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 1:10 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் வனப்பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளதால் நீர் நிலைகளை தேடி காட்டுயானைகள் அலைந்து வருகின்றன.

கடும் வறட்சி

கோவை வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கோவை, மதுக்கரை, போளூவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனை சுற்றி உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, கடமான், புள்ளிமான், காட்டெருமை, சிறுத்தைப்புலி, புலி, கரடி, செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகளும், அரிய வகை பறவை இனங்களும் உள்ளன.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டதால் கோவை மாவட்டத்தில் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காக நீர் நிலைகளை தேடி அடர்ந்த வனப்பகுதியில் அலைந்து திரிகின்றன. மேலும் வனப்பகுதியையொட்டி உள்ள கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. ஒரு சில நேரங்களில் மனித– வனவிலங்கு மோதல் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இடப்பெயர்ச்சி

தற்போது யானைகளின் இடப்பெயர்ச்சி காலம் என்பதால் வனப்பகுதியின் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு காட்டுயானைகள் இடம் பெயர்ந்து வருகின்றன. இதனால் வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிகளில் காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லிமலை வனப்பகுதியில் இருந்து 30–க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் ரோட்டை கடந்தன.

பின்னர் அந்த யானைகள் சமயபுரம் வழியாக மாம்பட்டி பகுதிக்கு சென்றது. அங்கு கல்லாறு ஆற்றில் தண்ணீரை குடித்துவிட்டு, ஒரு சில யானைகள் ஆற்றை கடந்து சென்றன. ஆனால் 5–க்கும் மேற்பட்ட யானைகள் ஆற்றை கடந்து செல்லாமல் சமயபுரம் வழியாக மீண்டும் திரும்பின. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் வாகனங்கள் அதிகளவில் சென்று கொண்டு இருந்ததால், காட்டுயானைகளால் ரோட்டை கடக்க முடியவில்லை. இதனால் அந்த யானைகள் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த புதர் மறைவில் நின்றன.

பொதுமக்கள் கோரிக்கை

இதுகுறித்து நேற்று பகல் 12 மணிக்கு மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரகர் நசீர், வனவர்கள் ரவி, செல்வக்குமார், வனக்காப்பாளர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தி, காட்டுயானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.

தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு பின் காட்டுயானைகள் நெல்லிமலை வனப்பகுதிக்கு சென்றன. இதை தொடர்ந்த அந்த வழியில் போக்குவரத்து தொடங்கியது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, காட்டு யானைகளை விரட்ட வனத்துறையினரிடம் போதுமான பட்டாசுகள் இருப்பு இல்லை. போதிய வேட்டைத்தடுப்பு காவலர்களும் இல்லை. இதனால் காட்டுயானைகளை உடனடியாக முடியவில்லை. இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


Next Story