டாப்சிலிப்பில் யானை பொங்கல் கொண்டாட்டம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்
பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் கொண்டாடப்பட்ட யானை பொங்கலை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப்பில் நேற்று யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோழிகமுத்தி, சின்னாறு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகள் ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, அங்குள்ள மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டன. 2 வயது குட்டி யானை உள்பட மொத்தம் 15 யானைகள் வரவழைக்கப்பட்டன.
வழக்கமாக சிறந்த கும்கி யானையான கலீமுக்கு பட்டம் கட்டப்படும். ஆனால் இந்த ஆண்டு கலீம் வராததால் ராமு என்ற யானைக்கு பட்டம் கட்டப்பட்டு இருந்தது. மற்ற யானைகளுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு இருந்தன.
சிறப்பு பூஜைஇதையொட்டி மலைவாழ் மக்கள் மைதானத்தில் புதுபானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் யானைகளுக்கு உணவாக கொடுக்க சர்க்கரை பொங்கல், வெல்லம், கரும்பு, வாழைப்பழம், கொப்பரை தேங்காய் போன்றவை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து ஒவ்வொரு யானைக்கும் தனி, தனியாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது யானைகள் வணங்கும் விதமாக துதிக்கையை தூக்கி பிளிறின. இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் யானைக்கு கரும்பு, சர்க்கரை பொங்கல் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் யானைகள் முன்பு நின்று ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
மலைவாழ் மக்களுக்கு மரியாதைஇதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கணேசன் கூறுகையில், ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில் 1910–ம் ஆண்டு வளர்ப்பு யானைகள் முகாம் தொடங்கப்பட்டது.
இங்குள்ள மலைவாழ் மக்கள் யானைகளையும், வனத்தையும் பாதுகாத்து வருகின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் டாப்சிலிப்பில் யானை பொங்கல் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது என்றார்.
முதுமலையில் எளிமையாக கொண்டாட்டம்நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் செயல்பட்டு வருகிறது. இந்த முகாமில் ஒவ்வொரு ஆண்டும் யானை பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் நர்மதா, பாரதி ஆகிய 2 யானைகள் திடீரென இறந்ததால் தெப்பக்காட்டில் இருந்த வளர்ப்பு யானைகள் முகாம் தற்காலிகமாக மூடப்பட்டு பாம்பேக்ஸ், ஈட்டிமூலா, பைசன் ரோடு ஆகிய இடங்களில் உள்ள முகாம்களுக்கு வளர்ப்பு யானைகள் மாற்றப்பட்டன.
எனவே இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா பாம்பேக்ஸ், ஈட்டிமூலா, பைசன் ரோடு ஆகிய முகாம்களில் எளிமையாக கொண்டாடப்பட்டது.