ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு


ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
x
தினத்தந்தி 17 Jan 2017 1:17 AM IST (Updated: 17 Jan 2017 1:17 AM IST)
t-max-icont-min-icon

ரெட்டிச்சாவடி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ரெட்டிச்சாவடி,

புதுவை மாநிலம்

புதுவை மாநிலம் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் மனோகர் (வயது 32). தனியார் செருப்பு தயாரிக்கும் கம்பெனியில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கண்மணி(27). இவர் காட்டுக்குப்பத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்காளராக வேலை செய்து வந்தார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது.

மனோகர் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது ஓட்டலில் வேலை செய்யும் தனது மனைவியை மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம்.

சாலையின் குறுக்கே...

இந்த நிலையில், சம்பவத்தன்று வேலையை முடித்துவிட்டு மனோகர் மோட்டார் சைக்கிளில் காட்டுக்குப்பத்தில் கண்மணி வேலை செய்யும் ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு பணிகளை முடித்துவிட்டு தயார் நிலையில் இருந்த கண்மணி, தனது கணவருடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே நாய் ஒன்று சென்றது. இதனால் அதன் மீது மோதாமல் இருக்க மனோகர் மோட்டார் சைக்கிளை உடனடியாக நிறுத்தினார். இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கண்மணி கீழே விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மனோகர் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி கண்மணி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story