செல்லத்தம்மன் கோவில் திருவிழா 19–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
மதுரை செல்லத்தம்மன் கோவில் திருவிழா 19–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மதுரை,
மதுரை செல்லத்தம்மன் கோவில் திருவிழா 19–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மேலும் அம்மனுக்கு 26–ந்தேதி பட்டாபிஷேகம் நடக்கிறது.
செல்லத்தம்மன் கோவில்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலான செல்லத்தம்மன் கோவில், சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ளது. முற்காலத்தில் பாண்டிய நாட்டை மணலூரை தலைநகராக கொண்டு குலசேகர பாண்டிய மன்னன் ஆட்சி செய்து வந்தான். அப்போது மன்னிடம் தனஞ்செயன் என்ற வணிகன் கடம்பவனக்காட்டில் தான் கண்ட அற்புதக் காட்சியை தெரிவித்தான்.
அந்த நேரத்தில் குலசேகர மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி கடம்பவனக்காட்டை திருத்தி நகரமாக உருவாக்க கூறினார். பின்னர் மன்னன் அந்த காட்டை சீரமைத்து மதுரை நகரை உருவாக்கி, காவல் தெய்வமான காளிதேவிக்கு வடக்குத்திசையில் கோவில் அமைத்தான். அந்த காளி தேவி பிற்காலத்தில், செல்வத்தம்மன் என்று அழைக்கப்பட்டது. அது காலங்கள் செல்ல, செல்ல மருவி செல்லத்தம்மன் என்று பெயர் வழக்கமாயிற்று
கொடியேற்றம்இந்த கோவிலில் அம்மன் அரக்கனை தலையில் மிதித்து அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். செல்லத்தம்மன் கோவிலில் இந்தாண்டுக்கான திருவிழா வருகிற 19–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 28–ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி, ஆவணி வீதிகளில் உலா வருகிறார். மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான 26–ந்தேதி செல்லத்தம்மனுக்கு பட்டாபிஷேகமும், 27–ந் தேதி சட்டத்தேரும், 28–ந் தேதி மலர்ச்சப்பரமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணைகமிஷனர் நடராஜன் செய்து வருகின்றனர்.