முனியாண்டிசாமி கோவில் விழா பக்தர்கள் பூ, பழத்தட்டுகளுடன் ஊர்வலமாக வந்தனர்
திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டிசாமி கோவில்
திருமங்கலம்,
திருமங்கலம் பகுதியில் உள்ள டி.புதுப்பட்டி, எஸ்.கோபாலபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் தைபொங்கலை முன்னிட்டு அங்குள்ள முனியாண்டிசாமி கோவில்களில் விழா நடைபெற்றது. டி.புதுப்பட்டியில் 50–வது ஆண்டு அன்னதானபூஐ விழா சிறப்பாக நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற விழாவில், முதல்நாள் 100–க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து, ஊர்வலமாக சென்று முனியாண்டிசாமிக்கு அபிஷேகம் செய்தனர்.
மாலையில் ஏராளமான பக்தர்கள் பூ, பழத்தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று முனியாண்டிசாமிக்கு, அபிஷேகம் செய்து வழிபட்டனர். மறுநாள் கருப்பணசாமிக்கு ஆடுகள் பலியிட்டு பூஜைகள் செய்யப்பட்டன. அதை மதியம் அசைவ அன்னதானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 50–ம் ஆண்டு விழா மலரை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அர்ஜூனன் வெளியிட்டார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் துரை.கோவிந்தராஜன், சேகர், வெங்கிடசாமி உள்பட விழா குழுவினர் செய்து இருந்தனர்.
பாதங்களுக்கு பூஜைஇதேபோல சின்ன செங்கப்படை என்ற எஸ்.கோபாலபுரத்தில் முனியாண்டிசாமியின் பாதங்களுக்கு பூஜை செய்யும் விழா நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக கோவில் முன்பு கொடி ஏற்றப்பட்டு பக்தர்கள் விரதம் மேற்கொண்டனர். அதைத்தொடர்ந்து பொங்கல் தினத்தன்று கிராமமக்கள் மேளதாளத்துடன் பூ, பழத்தட்டுகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து முனியாண்டிசாமியின் பாதங்களுக்கு பல்வேறு அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடத்தினர். அப்போது பெண்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து குலவையிட்டனர். அதைத்தொடர்ந்து ஆடுகள் பலியிடப்பட்டு, சமைத்த உணவை சாமிக்கு படையலிட்டு பூஜை செய்து, பக்தர்களுக்கு அசை அன்னதானம் வழங்கப்பட்டது.