ஊர் தலைவர் யார் என்பதில் தகராறு: போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இரு தரப்பினர் போராட்டம்
ஊர் தலைவர் யார் என்பதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீஸ் நிலையத்தை இரு தரப்பினர் முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டி ஊர் தலைவராக இருப்பவர் கண்ணன். இவர் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். இவருடைய தலைமையில் நேற்று முன்தினம் அந்த பகுதியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் அங்கிருந்த மைக்கில் நான் தான் ஊர் தலைவர் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதை கண்ணன் தட்டிக்கேட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.
முற்றுகைஇதற்கிடையே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ராஜேந்திரன் சின்னாளபட்டி போலீசில் புகார் அளித்தார். அதில், தன்னை கொலை செய்ய ஊர் தலைவர் கண்ணன், மொட்டைப்பாண்டி, ஜெயராஜ், ராஜாங்கம் உள்பட 6 பேர் முயற்சி செய்வதாகவும் கூறியிருந்தார்.
இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதற்காக கண்ணன் உள்பட 6 பேரையும் சின்னாளபட்டி போலீஸ் நிலையத்திற்கு வரும்படி போலீசார் அழைத்தனர். இதனால் ஊர்த்தலைவர் கண்ணன் தரப்பினர் சுமார் 100 பேருடன் நேற்று காலை சின்னாளபட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். பின்னர் ராஜேந்திரன் பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு ராஜேந்திரன் தரப்பினரும் வந்தனர். இரு தரப்பினரும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. இதனைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வருகிற 21–ந்தேதி பொதுமக்கள் கூடி தலைவரை தேர்வு செய்வது என்று பேசி முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.