திம்பம் மலைப்பாதையில் ஆபத்தை அறியாமல் காரை நிறுத்தி குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் சுற்றுலா பயணிகள்


திம்பம் மலைப்பாதையில் ஆபத்தை அறியாமல் காரை நிறுத்தி குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:15 AM IST (Updated: 17 Jan 2017 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தை அறியாமல் காரை நிறுத்தி குரங்குகளுக்கு உணவு கொடுக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

திம்பம் மலைப்பாதை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்து உள்ளது திம்பம் மலைப்பாதை. பண்ணாரியில் இருந்து திம்பம் வரை 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது. இந்த வனப்பகுதியில் அனுமன் மந்தி (வால் நீண்டு உடல் முழுவதும் வெள்ளை நிறத்திலும், முகம் மட்டும் கருப்பு நிறத்திலும் இருக்கும்) மற்றும் சாதாரண வகை குரங்குகள் ஏராளமாக வசித்து வருகின்றன.

வனப்பகுதியில் குரங்குகளுக்கு தேவைப்படும் உணவுகள் கிடைக்கின்றன. ஆனால் திம்பம் மலைப்பாதை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணிகள் கொடுக்கும் ருசியான உணவை குரங்குகள் தின்று பழகியதால் அவைகள் வனப்பகுதிக்குள் செல்லாமல் ரோட்டின் ஓரத்தில் உள்ள தடுப்பு சுவரில் உட்கார்ந்து கொண்டு அந்த வழியாக செல்லும் யாராவது உணவு கொடுப்பார்களா? என வாகனங்களை ஏக்கத்துடன் பார்த்தபடி காத்துக்கிடக்கின்றன.

குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை...

திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் ரோட்டோரம் நிற்கின்ற குரங்களை கண்டதும் வாகனங்களை நிறுத்தி தங்களிடம் உள்ள உணவுப்பொருட்களை வழங்கி மகிழ்கிறார்கள். சுற்றுலா பயணிகள் கொடுக்கும் உணவுப்பொருட்களை வாங்க குரங்குகள் ரோட்டை கடக்கும்போது அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்களில் அடிபட்டு இறந்து விடுகின்றன.

மேலும் சுற்றுலா பயணிகள் பாலித்தீன் பைகளில் உள்ள உணவுப்பொருட்களை குரங்குகளுக்கு கொடுக்கும்போது, அவைகள் பாலித்தீன் பைகளையும் தின்று இறந்த சம்பவமும் நடந்து உள்ளது. ஆனால் குரங்குகளின் மீது ஏற்பட்ட பரிவின் காரணமாக இதுபோன்ற ஆபத்துகளை அறியாமல் சுற்றுலா பயணிகள் உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றனர்.

கோரிக்கை

இதை தடுக்கும் பொருட்டு ‘குரங்குகளுக்கு உணவுப்பொருட்களை சுற்றுலா பயணிகள் கொடுக்க வேண்டாம்’ என்று வனத்துறையினர் திம்பம் மலைப்பாதையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள் வைத்து உள்ளனர். எனினும் சுற்றுலா பயணிகள் அதை கண்டு கொள்வதில்லை. எனவே வனத்துறையினர் திம்பம் மலைப்பாதையில் ரோந்து சுற்றி வந்து குரங்குகளுக்கு உணவுப்பொருட்கள் கொடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story