காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது


காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி புதுச்சேரியில் உள்ள சுற்றலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

காணும் பொங்கல்

பொங்கல் பண்டிகையை தொடர்ந்து புதுவையில் நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த காணும் பொங்கலை மக்கள் சிறப்பாக கொண்டாடினார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் காலில் விழுந்து மற்றவர்கள் ஆசி பெற்றனர்.

இதையொட்டி நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் மூடபட்டிருந்தன. கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் எல்லாம் கார், பஸ், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் நகர்ப்புறத்தை நோக்கி வந்தனர்.

பூங்காவில் கூட்டம்

கையில் கட்டுச்சோறுடன் வந்த அவர்கள் பகல் பொழுதில் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். கொண்டுவந்த கட்டுச்சோற்றை அங்கு வைத்து உண்ட அவர்கள் ஓய்வு எடுத்தனர். பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி விளையாடிய குழந்தைகள் மகிழ்ச்சியுடன் நேரத்தை கழித்தனர்.

மேலும் நேற்று தியேட்டர்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தள்ளுமுள்ளுகளுக்கு இடையே போராடி டிக்கெட் பெற்ற அவர்கள் சினிமா பார்த்தனர்.

கடற்கரை

இதேபோல் சுண்ணம்பாறு படகுகுழாமிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்து இருந்த சுற்றுலா பயணிகள் படகுசவாரி செய்து பாராடைஸ் பீச்சுக்கு சென்று காணும் பொங்கலை கொண்டாடினார்கள்.

மாலை வேளையில் மக்கள் அனைவரும் கடற்கரையில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காணப்பட்டது. கடற்கரைக்கு வந்தவர்களின் வாகனங்களை போலீசார் ஆம்பூர் சாலை, செஞ்சி சாலை பகுதியிலேயே மடக்கினார்கள்.

சண்டே மார்க்கெட்

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே செயல்படும் சண்டே மார்க்கெட் நேற்றும் செயல்பட்டது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சண்டே மார்க்கெட்டில் வாங்கி குவித்தனர்.

இதேபோல் வெளிமாநிலங்களிலிருந்தும் காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலா பயணிகளும் ஏராளமான பேர் வந்திருந்தனர். இதன் காரணமாக புதுவையில் உள்ள ஓட்டல்களும் நிரம்பி வழிந்தன. நேற்று உணவு விடுதிகள் பல மூடிக்கிடந்ததால் சுற்றலா பயணிகள் சாப்பாட்டு கிடைக்காமல் அவதியடைந்தனர். திறந்திருந்த ஓட்டல்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பஸ்களில் கூட்டம்

காணும் பொங்கலை கொண்டாடிவிட்டு மாலை வேளையில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.


Next Story