பாகூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கி சூடு: தடியடி


பாகூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல் போலீஸ் துப்பாக்கி சூடு: தடியடி
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

பாகூர் அருகே இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் துப்பாக்க சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

தாக்குதல்

புதுச்சேரி மாநிலம் பாகூர் அருகே உள்ள குருவிநத்தம் பகுதியை சேர்ந்த 2 பேர் நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கல் தினத்தை முன்னிட்டு மோட்டார் சைக்கிளில் பெரியார்நகர் பேட் பகுதிக்கு சென்றனர். அப்போது அவர்கள் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த பெரியார் நகர் பேட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்தவர்கள், குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் பெரியார் நகர்பேட் பகுதிக்கு சென்று அங்கு இருந்த வாலிபர்களை தாக்கியதாக தெரிகிறது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஆயுதங்களுடன் சென்றனர்

இந்த நிலையில் நேற்று இரவு குருவிநத்தம் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 2 பேர் பெரியார் நகர் பேட்டில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் நடந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி, உங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கும், எங்கள் ஊரை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. எனவே நீங்கள் இங்கு வரக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தங்கள் ஊருக்கு சென்று பெரியார்நகர் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் தங்களை தாக்கி விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குருவிநத்தம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அவர்கள் தங்கள் கைகளில் இரும்பு கம்பி, தடி போன்ற ஆயுதங்களுடன் பெரியார் நகர் பேட் பகுதிக்கு சென்றனர்.

துப்பாக்கி சூடு

இதனை பார்த்த உடன் பெரியார் நகர் பேட் பகுதியை சேர்ந்த மக்கள் ஆயுதங்களுடன் அங்கு கூடினர். இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இது பற்றிய தகவல் அறிந்த உடன் போலீசார் அங்கு விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். ஆனால் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதற்கிடையே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பெரியார் நகர் பேட் பகுதியை சேர்ந்த 5 வீடுகள், 5 மோட்டார் சைக்கிள்கள், மாரியம்மன் கோவிலின் மேற்பகுதி ஆகியவை சேதம் அடைந்தன. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாகூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 9 ரவுண்டுகள் சுட்டார். அப்போது கலவரக்காரர்கள் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது மண்டை உடைந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கலவரத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த கலவரக்காரர்களை நோக்கி தடியடி நடத்தினர். இதனால் அனைவரும் அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இதில் குருவிநத்தம் பகுதியை சேர்ந்தவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த பலர் காயம் அடைந்தனர்.

சாலை மறியல்

இதனை தொடர்ந்து தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பெரியார் நகர் பேட் பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன், போலீஸ் சூப்பிரண்டுகள் ரஹீம், தெய்வசிகாமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.


Next Story