தமிழகத்தில் பின்னப்படும் சதிவலையை இளைஞர்கள் முறியடிக்க வேண்டும்


தமிழகத்தில் பின்னப்படும் சதிவலையை இளைஞர்கள் முறியடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 17 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் தமிழகத்தில் பின்னப்படும் சதிவலையை இளைஞர்கள் முறியடிக்க வேண்டும் என்று தஞ்சையில் பழ.நெடுமாறன் பேசினார்.

தஞ்சாவூர்,

பழ.நெடுமாறன் பேச்சு

தஞ்சைத் தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற 3 நாள் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழாவின் நிறைவு விழாவில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசியதாவது:-

சங்க காலம் முதல் பொங்கல் விழாவை கொண்டாடி வருகிறோம். தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டாடப்படும் திருவிழா பொங்கல் திருவிழா. மற்ற பண்டிகைகள் எல்லாம் சமய சார்பில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பொங்கல் திருநாளை மட்டுமே அனைத்து சமயங்களைச் சார்ந்த தமிழர்களும் கொண்டாடி வருகின்றனர். தொல்காப்பியர் தோன்றிய காலம் முதல் பொங்கல் விழாவுடன் ஏறுதழுவுதலும் சேர்த்துக் கொண்டாடப்படுகிறது. ஏறுதழுவுதல் என்கிற மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு தமிழகக்கிராமங்களில் எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

பண்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை

இந்தியாவில் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் ஒரு பண்பாட்டு விழா உள்ளது. அந்த விழாவைக் கொண்டாட அந்தந்த மாநிலத்துக்கு உரிமை இருக்கிறது. இதில், தலையிட்டு தடை செய்யும் உரிமை யாருக்கும் கிடையாது. ஆனால், யாரோ வெளிநாட்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு போட்டதன் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, பண்பாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை. உலகில் உள்ள 12 கோடி தமிழர்களும் இத்தடையை உடைத்து எறிய வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம். கிராமங்களில் தோறும் அந்த தடையை இளைஞர்கள் உடைத்து எறிந்து ஜல்லிக்கட்டு நடத்தினர். உச்ச நீதிமன்றத்தை நாம் மதிக்கிறோம். ஆனால், நம் பண்பாட்டுக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றத்துக்கு உரிமை கிடையாது.

ஐந்தாயிரம் ஆண்டுகளாக நம் மொழி மீது வடமொழிப் பண்பாடு படையெடுத்து வருகிறது. இதை தொல்காப்பியர், இளங்கோவடிகள், கம்பர் உள்ளிட்டோர் தடுத்து நிறுத்தினர். இதை அனைவரும் உணர வேண்டும். எதிர்காலத்தில் நம் தமிழர்களின் பல்வேறு பண்பாடுகளுக்குதடை விதிப்பதற்கு முன்னறிவிப்பாக ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

சதிவலை பின்னப்படுகிறது

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் சதிவலை பின்னப்படுகிறது. அந்த சதிவலையை பின்னுபவர்கள் தங்கள் முகத்தை வெளியில் காட்டாமல் பிரசாரம் செய்கிறார்கள். அறை முறியடிக்க அரசியல் கட்சி, எல்லைகளை தாண்டி தமிழர்களின் பண்பாட்டுக்கு விடப்பட்ட அறைகூவலாக கருதி அதனை முறியடிக்க இளைஞர்கள் முன்வரவேண்டும். இதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதிவலையை பின்னுபவர்கள் யார், திட்டம் போடுபவர்கள் யார் என்பதை மக்களிடம் கொண்டு சென்று அவர்களின் முகமூடியை கிழிக்க தயங்கமாட்டேன். தமிழகத்தை சுற்றி பின்னப்படும் சதி வலையை அறுத்து எறிய தமிழக மக்கள் தயங்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story