கோவிலுக்கு சென்ற மாட்டு வண்டிகளை திருப்பி அனுப்பிய போலீசார்


கோவிலுக்கு சென்ற மாட்டு வண்டிகளை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 17 Jan 2017 2:13 AM IST (Updated: 17 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழியில், ஜல்லிக்கட்டு பிரச்சினையால் கோவிலுக்கு சென்ற மாட்டு வண்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி,

மாட்டுப் பொங்கல்

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு மறுநாள் வரும் மாட்டுப்பொங்கல் அன்று கிராம புறம் மற்றும் நகர் புறங்களில் மாடு வளர்ப்போர் தங்களது மாடுகளை அலங்கரித்து, அதற்கு பொங்கல் வைத்து படைத்து சிறப்பு வழிபாடு செய்வர். இதைத்தொடர்ந்து மாடுகளை வண்டியில் பூட்டி அருகில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று வழிபாடு செய்யும் வழக்கம் பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாட்டுப் பொங்கலையொட்டி சீர்காழி அருகே நிம்மேலி, அகணி, கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சிலர் மாடுகளுக்கு பூஜை செய்து, அதை 2 வண்டிகளில் பூட்டி, அதில் சிறுவர்களை அழைத்து கொண்டு சீர்காழியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். இதனை அறிந்த சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சீர்காழி புறவழிச்சாலையில் ரெயிலடி சாலையில் சென்ற மாட்டு வண்டிகளை தடுத்து நிறுத்தினர். தற்போது ஜல்லிக்கட்டு பிரச்சினை நடந்து வருவதால் மாடுகளை வண்டியில் பூட்டி செல்லக்கூடாது என்று கூறி போலீசார் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் கோவிலுக்கு செல்லாமல் ஏமாற்றத்துடன் ஊருக்கு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

வேதனை

இதுகுறித்து அப்பகுதி சேர்ந்தவர்கள் கூறுகையில், ஐகோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த மட்டும்தான் தடைவிதித்துள்ளது. ஆனால், மாடுகளை வண்டியில் பூட்டி செல்லக்கூடாது என்று சொல்லவில்லை. பொதுவாக சீர்காழி பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதே கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை வண்டியில் பூட்டி செல்லக்கூடாது என்று போலீசார் கண்டிப்புடன் கூறியதால் வேதனை அடைந்துள்ளோம் என்று கூறினார்.


Next Story