வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன், நாளை நிறைவுபெறுகிறது


வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன், நாளை நிறைவுபெறுகிறது
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நாளை நிறைவு பெறுகிறது. பரமபதவாசல் இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும்.

திருச்சி,

வைகுண்ட ஏகாதசி விழா

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 29-ந்தேதி பகல் பத்து உற்சவம் தொடங்கியதில் இருந்து நம்பெருமாள் தினமும் காலையில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளான கடந்த 7-ந்தேதி மோகினி அலங்காரம் எனப்படும் நாச்சியார் திருக்கோலத்தில் நம் பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு

மறுநாள் (8-ந்தேதி) வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு நம்பெருமாள் சொர்க்கவாசலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அன்று இரவு 10 மணி வரை சொர்க்கவாசல் திறந்து இருந்ததால் இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.8-ந்தேதியில் இருந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. இதனை தொடர்ந்து 9-ந்தேதியில் இருந்து மதியம் 12 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அருள் பாலித்தார். கடந்த சனிக்கிழமை திருக்கைத்தல சேவையும், ஞாயிற்றுக்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். இந்த நிகழ்ச்சியிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இன்று தீர்த்தவாரி

வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் பத்தாம் திருநாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணிக்கு சந்திரபுஷ்கரணியில் நம்பெருமாள் தீர்த்தவாரி காணும் நிகழ்ச்சி நடக்கிறது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும், மாலை 6.45 மணி முதல் இரவு 9 மணி வரையும் மூலவரை முத்தங்கியில் தரிசனம் செய்யலாம். இரவு 9 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது. இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பரமபதவாசல் திறந்து இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் மூடப்பட்டு அடுத்த வைகுண்ட ஏகாதசி விழாவின் போது திறக்கப்படும். நாளை (புதன்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நம்மாழ்வாருக்கு நம்பெருமாள் மோட்சம் வழங்குவார். இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Next Story