தடையை மீறி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்


தடையை மீறி ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த காளைகளை உற்சாகமாக அடக்கிய வீரர்கள்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.

திருச்சி,

தடையை மீறி ஜல்லிக்கட்டு

திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகில் உள்ள அதவத்தூர் ஊராட்சி சாவடி திடலில் நேற்று காலை 8.30 மணியளவில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. முதலில் கோவில் காளை விடப்பட்டது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் பகுதியில் இருந்து விடப்பட்டன. மூக்கு கயிறு அகற்றப்பட்டதும் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. திமிறிக் கொண்டு ஓடிய காளைகளை மாடுபிடிக்கும் வீரர்கள் பிடிக்க முற்பட்டனர். ஒரு சில காளைகளை தவிர, மற்ற காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் நழுவி சென்றன. ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் காண அதவத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் பெரும் திரளாக வந்திருந்தனர்.

சோமரசம் பேட்டை

சோமரசம்பேட்டை பகுதி கோவில் மாடு உள்பட 5 ஜல்லிக்கட்டு காளைகள் விநாயகர் கோவில், மதுரகாளியம்மன் கோவில்களின் முன்பாக நிறுத்தி, சாமி கும்பிட்டபின் எம்.ஜி.ஆர். சிலைக்கு அருகே அழைத்து வரப்பட்டன. பின்னர் முதலாவதாக கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பிறகு மற்ற காளை மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. அவை சீறிப்பாய்ந்து வீதிகளின் வழியாக ஓடின. இதை திரளான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

சோமரசம்பேட்டை சித்த மருத்துவமனை அருகில் நேற்று காலையில் த.மா.கா. விவசாய பிரிவின் சார்பாக பசுமாடு மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பொங்கல் ஊட்டிவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. த.மா.கா.வின் மாநில விவசாய பிரிவு தலைவர் புலியூர் நாகராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை விசி கணேசன், கொத்தட்டை ராஜேந்திரன், அன்பழகன், சதீஸ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் கீழஎசனை கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் முடிந்து, கரிநாள் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது வழக்கம். இந்நிலையில் தற்போது ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளதால் இந்தாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுமா? என்ற மனநிலையில் அக்கிராம வாலிபர்கள் இருந்தனர். எனினும் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக வாடிவாசல் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

இதனை கேள்விப்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மதியத்திற்கு மேல் வாடிவாசல் அருகே திரண்ட வாலிபர்கள் கோவில்காளை என்று கூறி சிறிய காளையை அவிழ்த்துவிட்டனர். இதனையடுத்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

போலீசார் தடியடி

அப்போது காளைகள் மக்கள் கூட்டத்தின் இடையே சீறிப்பாய்ந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் கூட்டத்தினர் மீது லேசான தடியடி நடத்தினர். இதனால் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை கேள்விப்பட்ட அருகில் இருந்த மாடுபிடி வீரர்கள் அங்கு வந்தனர். மேலும் காளைகள் ஏராளமாக கொண்டுவரப்பட்டு தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் மற்றும் போலீசார் தடைவிதித்திருந்த போதிலும், அங்கு வெற்றிகரமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய உற்சாகத்தில் இளைஞர்கள் காணப்பட்டனர்.

இதேபோல் திருமானூர் வடக்குத்தெருவிலும் நேற்று 10-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பூலாம்பாடி

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள பூலாம்பாடி மேற்கு மந்தைவெளியில் நேற்று காளைகளுடன் வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் தாங்கள் கொண்டு வந்த காளைகளை அவிழ்த்து விட்டு அப்பகுதியில் ஓட விட்டனர். அப்போது அங்கிருந்த வாலிபர்கள் காளைகளின் பின்னால் ஓடிச்சென்று அவற்றை மடக்கி பிடித்தனர். இதற்கிடையே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடப்பதை அறிந்த பெரம்பலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக், அரும்பாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து கோர்ட்டு உத்தரவுப்படி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என கூறி தடுத்து நிறுத்தினர்.

அப்போது பொதுமக்கள் ஜல்லிக்கட்டை நடத்துவோம் என கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகுமாறு கேட்டுக் கொண்டனர். எனினும் அங்கிருந்து சிலர் செல்லாததால் அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.

சிவப்பட்டி

புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சிவப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வாடிவாசல் அமைக்கப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று தாரை தப்பட்டை முழங்க 30 காளைகளை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் அந்த காளைமாடுகளை அவிழ்த்து விட்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த அந்த காளைகளை சிறுவர்கள், இளைஞர்கள் விரட்டியபடி சென்றனர். இதில் சில காளைகளை இளைஞர்கள் அடக்கினர். பல காளைகள் அவர்கள் கையில் சிக்காமல் சீறிப்பாய்ந்து ஓடின. இதைக்காண சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கூடினர். அவர்கள் அங்கிருந்த மரங்களில் ஏறி நின்று ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளித்தனர்.

வடசேரிப்பட்டி

இதேபோல நார்த்தாமலையில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கோவில் காளை உள்பட 10 மாடுகளை ஊர்வலமாக சிவன்கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர் கோவிலில் மாடுகளுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு மாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். நார்த்தாமலை அருகே வடசேரிப்பட்டியில் 2 கோவில் மாடுகளை அவிழ்த்து விட முயன்றனர். இதனை சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

Next Story