பொன்னேரி அருகே ஜல்லிக்கட்டு நடத்தியதாக நாம் தமிழர் கட்சியினர் 10 பேர் கைது
பொன்னேரி அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த பழைய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் நேற்று காலை பொதுமக்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் இணைந்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர்.
தற்காலிகமாக அமைக்கப்பட்ட வாடி வாசல் வழியாக அந்த பகுதியில் உள்ள 15–க்கும் மேற்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டனர். அந்த மாடுகளை அந்த பகுதி இளைஞர்கள் மடக்கி பிடித்தனர். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை ரசித்தனர்.
10 பேர் கைதுஇந்த ஜல்லிக்கட்டு நடைபெறும் தகவல் அறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் ஜல்லிக்கட்டு முடிந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.
அப்போது அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷமிட்டனர். இதையடுத்து தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இதேபோல் பொன்னேரி தாலுகாவுக்கு உட்பட்ட 100–க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று பொதுமக்கள் தங்கள் காளை மாடுகளை தெருக்களில் அவிழ்த்து விட்டனர்.
மேலும் பல ஊர்களில்...நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள சிவநாயக்கன்பட்டி ஊராட்சி கரட்டுப்புதூரில் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. இதில் 50–க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. 2 மணி நேரம் நடந்த இந்த போட்டியை ஏராளமானவர்கள் பார்த்தனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம்புதூர், கடலாடி, வில்வாராணி ஆகிய கிராமங்களில் 4–வது நாளாக நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. நாகை மாவட்டம் வாய்மேடு நடுக்காடு பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. பொறையாறு அருகே திருக்கடையூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி நேற்று ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.
மஞ்சு விரட்டுவிழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு அருகே உள்ள குயிலாப்பாளையத்தில் காணும் பொங்கலையொட்டி நேற்று மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதனை வெளிநாட்டினர் உள்பட பலர் கண்டுகளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தடையை மீறி நேற்று எருது விடும் விழா நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரபட்டி பெரியகலையம்புத்தூரில் நடந்த ஜல்லிக்கட்டில் 50–க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். தகவல் அறிந்து போலீஸ் வருவதற்குள் போட்டி முடிந்து விட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இந்து மக்கள் கட்சியினர் நூதன முறையில் பொம்மலாட்ட மாடுகளை வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினர்.