250 ரூபாய்–செல்போனுக்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் அடித்து கொலை;3 பேர் கைது


250 ரூபாய்–செல்போனுக்காக விஜய் மக்கள் இயக்க தலைவர் அடித்து கொலை;3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் பாலாற்றில் பிணமாக கிடந்த விஜய் மக்கள் இயக்க தலைவர், ரூ.250 பணம் மற்றும் செல்போனுக்காக அடித்து கொலை செய்யப்பட்டார்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பாலாற்றில் பிணமாக கிடந்த விஜய் மக்கள் இயக்க தலைவர், ரூ.250 பணம் மற்றும் செல்போனுக்காக அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விஜய் மக்கள் இயக்க தலைவர்

காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் கடந்த 12–ந்தேதி ஆண் ஒருவர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அந்த பிணத்தை கைப்பற்றிய காஞ்சீபுரம் தாலுகா போலீசார், அவர் யார்? என விசாரணை நடத்தினர்.

அதில் பிணமாக கிடந்தவர் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் 3–வது தெருவைச் சேர்ந்த இமயம் ரவி(வயது 48) என்பதும், ஓவியரான அவர், காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

கடந்த 11–ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், அதன் பிறகு வீடு திரும்பி வரவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவரை காணவில்லை. இந்தநிலையில் அவர், பாலாற்றில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தியேட்டர்களில் அலங்காரம்

நடிகர் விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படம் கடந்த 12–ந்தேதி வெளியானது. இதற்காக 11–ந்தேதி இரவே அவரது ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் வைத்து அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டனர். காஞ்சீபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் செய்யப்பட்டு உள்ள அலங்கார ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக கடந்த 11–ந்தேதி இரவு இமயம் ரவி காஞ்சீபுரம் வந்தார்.

பின்னர் நள்ளிரவில் அவர், காஞ்சீபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது ஒரு ஆட்டோவில் 3 பேர் வந்தனர். காஞ்சீபுரம் பஸ் நிலையம் செல்வதற்காக இமயம் ரவி, அந்த ஆட்டோவை மறித்து ஏறினார்.

பணம் கேட்டு அடித்தனர்

அப்போது ஆட்டோவில் குடிபோதையில் இருந்த 3 பேரும் இமயம் ரவியிடம் பணம் கேட்டு மிரட்டி அடித்து உதைத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து ஆட்டோவை பாலாறுக்கு ஓட்டிச்சென்றனர்.

அங்கு இமயம் ரவியிடம் இருந்து ரூ.250 பணம் மற்றும் அவரிடம் இருந்த செல்போனை எடுத்துக்கொண்டு, மயங்கிய நிலையில் இருந்த அவரை பாலாற்றில் வீசி விட்டு தப்பிச்சென்று விட்டனர். இதில் நீரில் மூழ்கிய இமயம் ரவி, மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்து விட்டார்.

மறுநாள் ஓரிக்கை பகுதியில் பிணமாக மீட்கப்பட்டு உள்ளார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த தாலுகா போலீசார், ஆட்டோவில் வந்த மர்மநபர்களை தேடி வந்தனர்.

3 பேர் கைது

இந்தநிலையில் காஞ்சீபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஆட்டோவில் வந்த 3 பேரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், காஞ்சீபுரம் பல்லவன்நகர் முதல் தெருவைச் சேர்ந்த சீனு என்ற சீனிவாசன்(26), காஞ்சீபுரம் ஓரிக்கை அண்ணா நகரைச் சேர்ந்த ரஞ்சித் என்ற அப்பு(19) மற்றும் காஞ்சீபுரம் ஓரிக்கை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு(23) என்பதும், ஆட்டோ டிரைவர்களான இவர்கள் 3 பேரும் சேர்ந்துதான் இமயம் ரவியை பணம் கேட்டு மிரட்டி அடித்து கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், ரூ.250 பணம் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, சப்–இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கண்ணன் ஆகியோரை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story