காணும் பொங்கலை முன்னிட்டு வண்டலூர் பூங்கா திறக்கப்படாததால் மாமல்லபுரத்தில் குவிந்த பொதுமக்கள்
வண்டலூர் பூங்கா திறக்கப்படாததால் காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரம், பழவேற்காடு மற்றும் பூண்டி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வண்டலூர்,
வண்டலூர் பூங்கா திறக்கப்படாததால் காணும் பொங்கலை முன்னிட்டு மாமல்லபுரம், பழவேற்காடு மற்றும் பூண்டி ஏரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
வண்டலூர் பூங்காபொங்கல் பண்டிகையின் 3–ம் நாளான நேற்று காணும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கலை கொண்டாட பொதுமக்கள் பலர் குடும்பத்துடன் சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கூடுவார்கள்.
ஆனால் கடந்த மாதம் வீசிய ‘வார்தா’ புயலில் வண்டலூர் பூங்காவில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. சேதம் அடைந்த பூங்காவை சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சீரமைப்பு பணிகள் இன்னும் முழுமை அடையாததாலும், தேங்கி கிடக்கும் மரக்கழிவுகளால் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாலும் பொங்கல் பண்டிகைக்கு பூங்கா திறக்கப்படாது என பூங்கா அதிகாரிகள் அறிவித்தனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்இதை அறியாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் கார், மோட்டார் சைக்கிள் மற்றும் அரசு பஸ்களில் காணும் பொங்கலை கொண்டாட நேற்று வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு ஆர்வமுடன் வந்தனர். ஆனால் பூங்காவின் நுழைவு வாயில் கதவு பூட்டி இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பூட்டி இருந்த கதவில், ‘வார்தா’ புயல் சேதங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால் பூங்காவுக்குள் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று பேனர் வைத்து இருப்பதை கண்டு அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.
பெரும்பாலானவர்கள் அருகில் உள்ள கோவளம், மாமல்லபுரம் கடற்கரை நோக்கி படையெடுத்தனர்.
மாமல்லபுரம்மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். இதனால் மாமல்லபுரம் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் மனித தலைகளே காணப்பட்டது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் மற்றும் சுற்றுப்புற புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கட்டுச்சோற்றை கட்டிக்கொண்டு வந்து இருந்தனர்.
கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டைக்கல், கலங்கரை விளக்கம் ஆகிய இடங்களில் உள்ள சிற்பங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ந்தனர். ஐந்துரதம் பகுதியில் சர்வதேச அளவில் பல்வேறு வகையான 40 ஆயிரம் சங்குகள் உள்ள சங்கு அருங்காட்சியகத்தையும் பொதுமக்கள் சுற்றிப்பார்த்து ரசித்தனர். பலர் ‘செல்பி’ எடுத்தும் மகிழ்ந்தனர்.
குளிக்க தடைகடலில் குளிக்க போலீசார் தடை விதித்து தடுப்புகள் அமைத்து இருந்தனர். ஆனால் அதையும் மீறி தடுப்புகளை தாண்டி பயணிகள் சிலர் கடலில் நின்று பொழுதை கழித்தனர். ஆனால் கடலில் இறங்கி குளிக்க போலீசார் அனுமதிக்கவில்லை. தற்காப்புக்காக நீச்சல் படை வீரர்கள் கடலில் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர். காதல் ஜோடிகளும் அதிக அளவில் காணப்பட்டனர்.
காணும் பொங்கலையொட்டி மாமல்லபுரத்துக்கு பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
பூண்டி ஏரிதிருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் சத்தியமூர்த்தி நீர் தேக்கம் உள்ளது. இதன் அருகே சுமார் 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன் கற்கால மனிதன் வேட்டையாட பயன்படுத்திய கற்கருவிகளை பத்திரப்படுத்திய தொல் பொருள் ஆராய்ச்சி கழகத்தின் அருங்காட்சியகம் உள்ளது.
நீர் தேக்கம் சுற்று வட்டார பகுதிகளில் அழகிய பூங்காக்கள் உள்ளன. காணும் பொங்கலை முன்னிட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பூண்டி ஏரியில் குவிந்தனர்.
மீன்களை சுவைத்தனர்அணையில் இறங்கி குளிக்க போலீசார் தடை விதித்தனர். சுற்றுலா பயணிகள் மதுபாட்டில்களுடன் வருவதை தடுக்க அவர்களின் வாகனங்களை நெய்வேலி கூட்டு சாலையில் சோதனை செய்த பிறகே பூண்டி ஏரிக்கு செல்ல அனுமதித்தனர்.
சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பூண்டியில் பல திடீர் கடைகள் முளைத்தன. சிலர் ஏரி அருகே விற்கும் சுவையான மீன்களை வாங்கி அங்கேயே சமைத்து குடும்பத்துடன் சுவைத்தனர்.
பழவேற்காடு கடற்கரைபொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியானது கொசஸ்தலை, ஆரணி, சொர்ணமுகி, காலங்கி ஆறுகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய், வங்காளவிரிகுடா கடல் ஆகியவற்றின் நீர் ஒருங்கிணைந்து சேரும் இடமாக இயற்கையாகவே அமைந்து உள்ளது.
இந்தியாவின் 2–வது மிகப்பெரிய உவர்ப்பு நீரைக்கொண்ட இந்த ஏரி 160 வகையான மீன் இனங்களும், இதர நீர்வாழ் உயிரினங்களின் வசிப்பிடமாகவும் உள்ளது.
பழவேற்காடு ஏரியில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கானவர்கள் வந்து கடற்கரையில் கூடினார்கள்.
படகு சவாரிக்கு தடைசுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதையும் மீறி பலர் கடலில் குளித்தனர். பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்தது.
பழவேற்காடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையொட்டி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.