போலி பதிவு எண் புத்தகம் தயாரித்து விற்பனை: திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிய போலீஸ்காரர் இடைநீக்கம்
போலி பதிவு எண் புத்தகம் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிய போலீஸ்காரர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது. 4 பேர் கைது சென்னை கொளத்தூரில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் குறைந்த வி
சென்னை,
போலி பதிவு எண் புத்தகம் தயாரித்து விற்பனை செய்யப்பட்ட திருட்டு மோட்டார் சைக்கிளை வாங்கிய போலீஸ்காரர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.
4 பேர் கைதுசென்னை கொளத்தூரில் உள்ள மெக்கானிக் கடை ஒன்றில் குறைந்த விலையில் மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த வாரம் அங்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு இருந்த 2 மோட்டார் சைக்கிள்களில் ஒரே பதிவு எண் அச்சிடப்பட்டு இருப்பதை பார்த்த போலீசார் அதிர்ச்சி அடைந்ததுடன் விசாரணையை துரிதப்படுத்தினர்.
விசாரணையில், போலியாக பதிவு எண் புத்தகம் தயாரித்து, திருட்டு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கடையின் உரிமையாளர் எம்.கே.பி. நகரை சேர்ந்த சைன்ஷா (வயது 28), கொளத்தூரை சேர்ந்த முகமது ஷெரிப் (21), அவரது சகோதரர் முஷரப் (19), புளியந்தோப்பை சேர்ந்த அஜிதுல்லா (21) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ்காரர் இடைநீக்கம்இதற்கிடையே இந்த திருட்டு மோட்டார் சைக்கிள்கள் விற்பனையின் பின்னணியில் எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த சப்–இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீஸ் ஏட்டு கார்த்திக், போலீஸ்காரர் சுரேஷ் ஆகியோரும் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனால், போலீஸ் உயர் அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால், அவர்களிடம் நடந்த விசாரணையில், ‘திருட்டு மோட்டார் சைக்கிள் என தெரியாமல் வாங்கி விட்டோம்’ என்று தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் இருந்தும் 6 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. திருட்டு கும்பலிடம் இருந்து மேலும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த 13–ந்தேதி வெளியான போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவிப்பில், எம்.கே.பி. நகர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு கார்த்திக் இடைநீக்கம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கான காரணம் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த வழக்கில் போலீசார் உள்பட பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.