கூடங்குளம் அருகே புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி வியாபாரி மனைவியிடம் 100 பவுன் நகைகள் மோசடி 2 பெண்கள் கைது


கூடங்குளம் அருகே புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி வியாபாரி மனைவியிடம் 100 பவுன் நகைகள் மோசடி 2 பெண்கள் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 2:30 AM IST (Updated: 17 Jan 2017 11:53 PM IST)
t-max-icont-min-icon

100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கூடங்குளம்,

புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி மீன் வியாபாரி மனைவியிடம் 100 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

மீன் வியாபாரி

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணா. மீன் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அவருடைய மனைவி சுதா (வயது 36). இவருடைய வீட்டில் சுதாவின் உறவினர்களான அதே பகுதி வடக்கு தெருவை சேர்ந்த சுயம்புலிங்கம் மனைவி ஜானகி, முருகேசன் மனைவி லட்சுமி ஆகிய இருவரும் கடந்த 5 வருடங்களாக வேலை செய்து வந்தனர்.

இந்தநிலையில் தங்களுடைய கணவன்மார்களுக்கு உடல்நிலை சரியில்லை. எனவே உன்னிடம் நகைகள் இருந்தால் அதனை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொள்வதாகவும், பின்னர் நகையை திருப்பி தந்துவிடுவதாகவும் ஜானகியும், லட்சுமியும் கூறியுள்ளனர். இதனை உண்மை என்று நம்பிய சுதா, கடந்த சில மாதங்களுக்கு முன்பாக 25 பவுன் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.

புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை

பின்னர் சில நாட்கள் கழித்து சுதா தனது நகைகளை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு இருவரும் சீக்கிரம் திருப்பி தருவதாக கூறி சமாளித்துள்ளனர். பின்னர் நகைகளை திருப்பி கொடுக்காமல், மீண்டும் சுதாவிடம் உள்ள நகைகளை அபகரிக்க வேண்டும் என நினைத்து இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சுதாவை அழைத்து, உனது வீட்டில் புதையல் இருப்பதாக இருவரும் கூறியுள்ளனர். இதனையும் சுதா உண்மை என நம்பியுள்ளார்.

புதையலை எடுக்க வேண்டும் என்றால் பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு அதிக செலவாகும் என ஜானகி கூறியுள்ளார். பின்னர் இப்படியே பூஜைகள் செய்து புதையலை எடுத்து தருவதாக கூறி சுதாவிடம் இருந்து 75 பவுன் தங்க நகைகள் வரை ஜானகி அபகரித்துள்ளார். அதைத் தொடர்ந்து சுதா, எனக்கு புதையல் எதுவும் வேண்டாம். இந்த வி‌ஷயம் எனது கணவருக்கு தெரிந்தால் பிரச்சினையாகிவிடும். எனவே வாங்கிய நகைகளை சீக்கிரம் திருப்பி தாருங்கள் என்று கூறியுள்ளார்.

போலீசில் புகார்

இந்தநிலையில் ராஜேஷ் கண்ணா தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்துள்ளார். அதில் நகைகள் எதுவும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து, இதுதொடர்பாக சுதாவிடம் கேட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த சுதா, நடந்தது அனைத்தையும் விவரமாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் கண்ணா, சுதாவை கண்டித்துள்ளார்.

பின்னர் இதுபற்றி கூடங்குளம் போலீசில் ராஜேஷ் கண்ணா புகார் செய்தார். புகாரின் பேரில் ஜானகியை பிடித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், ஜானகி புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து நகைகளை அபகரித்தது தெரியவந்தது. அந்த நகைகளை போலீசார் கேட்ட போது, தனது கணவரின் தங்கையான லட்சுமியிடம் கொடுத்து வைத்திருப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து லட்சுமியை பிடித்து விசாரித்ததில், ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் நகைகள் அனைத்தையும் அடகு வைத்துள்ளதாக கூறினார்.

2 பெண்கள் கைது

இதுதொடர்பாக சப்–இன்ஸ்பெக்டர் சிவசந்திரேசுவரன் வழக்குப்பதிவு செய்து ஜானகி, லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்தார். அடகு வைத்துள்ள நகைகளை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். புதையல் இருப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி 100 பவுன் தங்க நகைகளை அபகரித்து, 2 பெண்களும் கைதான இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story