சோமங்கலம் அருகே வடமாநில வாலிபர் கொலை கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது


சோமங்கலம் அருகே வடமாநில வாலிபர் கொலை கள்ளக்காதலியின் கணவர் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 Jan 2017 2:00 AM IST (Updated: 18 Jan 2017 1:47 AM IST)
t-max-icont-min-icon

சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கத்தில் வட மாநில வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி,

சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கத்தில் வட மாநில வாலிபர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

வடமாநில வாலிபர் பிணம்

சோமங்கலம் அருகே காட்டரம்பாக்கம் ஏரியில், கடந்த 9-ந் தேதி வெட்டுக்காயத்துடன் 30 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார் என்ற அடையாளம் தெரியாததால் போலீசார் தனிப்படைகள் அமைத்து காட்டரம்பாக்கம், கீவளூர், இருங்காட்டுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில், தங்கி பணிக்கு சென்று காணாமல் போன வாடமாநில தொழிலாளர்கள் குறித்து கணக்கெடுத்து, போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

கள்ளக்காதல்

இதில், இறந்தவர், கீவளூர் பகுதியில், தங்கி பணியாற்றி வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜாய் உரங் (வயது 25), என்பது தெரிய வந்தது. கீவளூரில் இவர் தங்கி இருந்த வீட்டின் அருகே வசித்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜாய் சிங் கோத் (35), சுராஜ் சிங் (30), ரமேஷ் கோத் (32), ஆகிய மூன்று பேரும் சேர்ந்துதான் பிஜாய் உரங்கை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன. பிஜாய் சிங் கோத்தின் மனைவிக்கும், கொலையான பிஜாய் உரங்கிற்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர். இதை அறிந்த பிஜாய் சிங் கோத் இருவரையும் கண்டித்தார். ஆனால் இருவரும் கள்ளத்தொடர்பை துண்டிக்காமல் பழகி வந்தனர்.

மது வாங்கி கொடுத்தார்

இதனால் ஆத்திரம் அடைந்த பிஜாய் சிங் கோத், தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 8-ந் தேதி இரவு கீவளூரில் இருந்து காட்டரம்பாக்கம் ஏரி பகுதிக்கு பிஜாய் உரங்கை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்தார். போதை தலைக்கு ஏறியதும் மறைத்து வைத்து இருந்த இரும்பு கம்பியால் பிஜாய் உரங்கின் தலையில் ஓங்கி அடித்ததாக தெரிகிறது.

பின் கத்தியால் அவரது வாயை வெட்டினர். இதில் பிஜாய் உரங் சம்பவ இடத்திலேயே இறந்து போனார். பின் அவரது உடலை அங்கேயே போட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Next Story