ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்


ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:30 AM IST (Updated: 18 Jan 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

பரமத்திவேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பரமத்திவேலூர்,

பரமத்திவேலூர்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கப்படும் என தமிழகம் முழுவதும் உள்ள ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில் இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் பரமத்திவேலூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர். இதன் தொடர்ச்சியாக மாலை 5 மணி அளவில் திடீரென பரமத்தி வேலூர் நான்கு சாலை அருகே 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் திரண்டனர்.

அங்கு அவர்கள், நாட்டு மாடுகளை அழிக்க வேண்டாம். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க வேண்டாம். பீட்டா அமைப்பை உடனடியாக தடை செய்ய வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டிப்பது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் பரமத்திவேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

இதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார், உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் என எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

பின்னர் இருசக்கர வாகனங்களில் ஜல்லிக்கட்டு நடத்த ஆதரவு கோரி ஊர்வலமாக நாமக்கல் நோக்கி வந்த அவர்களை நாமக்கல் கடைவீதி அருகே போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். முன்னதாக நாமக்கல் பூங்கா சாலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு போராடிய நபர்களை கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக ‘வாட்ஸ்-அப்’ மூலம் தகவல் பரப்பப்பட்டதால், போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த இளைஞர்களை அவர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு பழைய பஸ்நிலையம் அண்ணாசிலை அருகே ஏறுதழுவுதல் மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். நிர்வாகி சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில் போலீஸ் தடியடியை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

குமாரபாளையம்

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தி நேற்று குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஓலப்பாளையம் பிரிவு ரோட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் முடிவடைந்தது. அங்கு ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ராசிபுரம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரி போராடி கைது செய்யப்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்களை விடுதலை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க அவசர சட்டம் இயற்ற கோரியும் ராசிபுரம் மக்கள் கூட்டமைப்பின் சார்பில் பழைய பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் கூட்டமைப்பின் செயலாளர் வக்கீல் நல்வினை விஸ்வராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க கூட்டமைப்பின் பொருளாளர் காமராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் பாச்சல் சீனிவாசன், பா.ம.க. மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பாலு, கோல்டன் நற்பணி மன்ற தலைவர் குபேர்தாஸ், செயலாளர் இளங்கோ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் ராஜா முகமது, தமிழ்நாடு தெலுங்கர் சங்க செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பா.ம.க. மாவட்ட அமைப்பு செயலாளர் மோகன்ராஜ் நன்றி கூறினார்.

Next Story