மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 5 வயது சிறுவன் சாவு


மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 5 வயது சிறுவன் சாவு
x
தினத்தந்தி 18 Jan 2017 2:01 AM IST (Updated: 18 Jan 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 5 வயது சிறுவன் சாவு பெற்றோருடன் சென்ற போது பரிதாபம்

காரிமங்கலம்,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஊராட்சி செல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். லாரி டிரைவர். இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு பூமேஷ் (வயது 5) என்ற மகன் இருந்தான். பெருமாள் நேற்று காலை மனைவி மற்றும் மகனுடன் கரகப்பட்டியில் உள்ள மாமனார் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறுவன் பூமேஷ் மோட்டார் சைக்கிளின் முன் பகுதியில் அமர்ந்து இருந்தான்.

கரகப்பட்டி அருகே சென்ற போது எதிரே கம்பைநல்லூரில் இருந்து காரிமங்கலம் நோக்கி ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அங்குள்ள ஒரு வளைவில் திரும்பிய போது 2 மோட்டார் சைக்கிள்களும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் முன்பகுதியில் அமர்ந்து சென்ற சிறுவன் பூமேஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான்.

உடனே பெருமாள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் பூமேஷ் பரிதாபமாக இறந்தான். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஸ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story