தடையை மீறி ஜல்லிக்கட்டு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு


தடையை மீறி ஜல்லிக்கட்டு போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Jan 2017 4:30 AM IST (Updated: 18 Jan 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் அருகே கூலமேட்டில் தடையை மீறி நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்,

ஜல்லிக்கட்டு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கூலமேட்டில் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக தடை காரணமாக இந்த கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படவில்லை.

நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி குறைந்த அளவு காளைகள் அவிழ்த்து விடப்பட்டு தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. அப்போது போலீசார் அந்த கிராம மக்களை ஜல்லிக்கட்டுக்கு தடை உள்ளது என்று கூறி எச்சரித்தனர். மேலும் அங்கு வாடி வாசலுக்காக அமைத்திருந்த தடுப்புகளையும் போலீசார் அகற்றினர்.

போலீசாருடன் வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் கூலமேடு கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கூறி, சுற்றுவட்டார கிராமங்களான கடம்பூர், கூடமலை, கொண்டையம்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து 35-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. இதையொட்டி மாடுபிடி வீரர்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூலமேட்டுக்கு வந்தனர். அங்கு வழக்கமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாரியம்மன் கோவில் திடலில் குவிந்தனர்.

இதையடுத்து ஆத்தூர் போலீசாரும், ஆயுதப்படை போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். அவர்கள் காளைகளை அழைத்து வந்தவர்களிடம் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று எச்சரித்தனர்.

வாடிவாசல் இல்லாத நிலையில் போலீசின் தடையை மீறி இளைஞர்கள் கூட்டத்தில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதையடுத்து மாடுபிடிவீரர்கள் காளைகளை விரட்டி சென்று அடக்க முயன்றனர். இதனால் போலீசாருக்கும், அங்கு காளைகள் கொண்டு வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

போலீசார் தடியடி

இருப்பினும் காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தொடர்ந்து காளைகளை அவிழ்த்து விடுவதும், அடக்குவதுமாக ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடந்தது. பின்னர் பலமுறை எச்சரித்தும், காளைகள் அவிழ்த்து விடப்பட்டதால் போலீசார் அங்கிருந்த கூட்டத்தினரை லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அதில் சிலர் போலீசாரை நோக்கி கற்களை வீசினர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கந்தசாமி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். மேலும் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்த அந்த கிராமத்தில் பிற்பகலுக்கு மேல் போலீசார் குவிக்கப்பட்டதால் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதனிடையே ஆத்தூர் அருகே மல்லியக்கரை பகுதியில் உள்ள கோபாலபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்று தகவல் கிடைத்ததும், அங்கு மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் ஆத்தூர் அருகே உள்ள பழனியாபுரி கிராமம் சுந்தரபுரம் மூலக்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த 3 மாடுகளுடன் வந்தனர். அவர்களிடம் ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரபாபு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர்.

Next Story