ஊர்வலம் செல்ல தீபா பேரவையினருக்கு அனுமதி மறுப்பு


ஊர்வலம் செல்ல தீபா பேரவையினருக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 18 Jan 2017 4:30 AM IST (Updated: 18 Jan 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி பாபநாசத்தில் ஊர்வலம் செல்ல தீபா பேரவையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் தீபா பேரவையின் விளம்பர பேனர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாபநாசம்,

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா பாபநாசத்தில் தீபா பேரவை சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாபநாசம் கீழவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வக்கீல் ராஜா தலைமை தாங்கினார். ரெகுநாதபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், வடக்கு மாவட்ட மாணவர் அணி இணை செயலாளருமான ஜெய்சங்கர், முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கண்ணன், விஜயகுமார், பாபநாசம் நகர அவை தலைவர் சுப்பிரமணியன், வார்டு செயலாளர் லியாகத்அலி, சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் அஜ்ஜி, அடைக்கலசாமி, பண்டாரவாடை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமருஜமான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அ.தி.மு.க. முன்னாள் தொகுதி இணை செயலாளரும், ஆதனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான நடராஜன் தலைமையில் ஏராளமானோர் எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பேனர் கிழிப்பு

முன்னதாக எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழாவையொட்டி பாபநாசத்தில் ஊர்வலம் செல்ல தீபா பேரவை சார்பில் போலீசாரிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் தீபா பேரவையினர் ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா ஊர்வலம் தொடர்பாக தீபா பேரவை சார்பில் பாபநாசத்தில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனரை மர்ம நபர்கள் சிலர் கிழித்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story