அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள்– பொதுமக்கள் போராட்டம்


அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள்– பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:24 AM IST)
t-max-icont-min-icon

அலங்காநல்லூரியில், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி, கல்லூரி மாணவர்கள்– பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. மேலும் சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கானோர் விடிய, விடிய போராட்டம் நடத்தினர். இதில் கலந்து கொண்ட பெண்கள் உள்பட சுமார் 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனை கண்டித்து நேற்று மாவட்டம் முழுவதும் இருந்து கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என சுமார் 150 பேர், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே திரண்டனர். இதனால் அந்த பகுதியில் நகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிகாமணி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

பின்னர் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆந்திர முதல்– மந்திரி சந்திரபாபு நாயுடுவின் சொந்த கிராமத்திலேயே, தடைசெய்யப்பட்ட மஞ்சுவிரட்டு போட்டியானது போலீசாரின் அனுமதியோடு நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் போலீசார் அனுமதி மறுக்கின்றனர்.

மேலும் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட உள்ளோம் என்றனர். பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி

இதேபோல, சாணார்பட்டி அருகே உள்ள கொசவபட்டி பஸ் நிறுத்தம் முன்பு, நேற்று காலை கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர். பின்னர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். மேலும், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் அவசர சட்டம் இயற்ற வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டை பாதுகாத்து நமது நாட்டு மாடு இனத்தை காக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் முத்துபாண்டி தலைமையில் சுமார் 30 பேர் திண்டுக்கல் நாகல்நகரில் இருந்து அலங்காநல்லூருக்கு மோட்டார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் தெற்கு போலீசார் பாரதிபுரம் அருகே அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

இதேபோல், கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியில் நேற்று இளைஞர்கள் திடீர் ஜல்லிக்கட்டு நடத்த வலிறுத்தியும், பீட்டா அமைப்பை கண்டித்தும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் பெரியகுளம்– மதுரை செல்லும் சாலையில் பள்ளபட்டி ஊராட்சி மன்ற அருகில் இருந்து புறப்பட்டு, கள்ளர்பள்ளி வரை சென்று பின்னர் முத்தலாம்மன் கோவிலை வந்தடைந்தது. அங்கு இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story